Published : 27 Mar 2018 10:36 AM
Last Updated : 27 Mar 2018 10:36 AM

உலக மசாலா: பூனை மீட்பர்!

மெரிக்காவின் லூசியானா பகுதியைச் சேர்ந்த ரான்டல் கோல்ப், மரங்களில் மாட்டிக்கொண்ட பூனைகளை மீட்கும் பணியை 4 ஆண்டுகளாகச் செய்து வருகிறார். ‘‘2014-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்று வீட்டில் இருந்தேன். அப்போது ஒரு பூனையின் துன்பக் குரல் கேட்டது. தோட்டத்தில் இருந்த மரத்தில் பூனை மாட்டிக்கொண்டு வெளிவர முடியாமல் தவித்துக்கொண்டிருந்தது. பூனையை மீட்க ஆட்களை அழைத்தேன். ஆனால் 2 நாட்களுக்குப் பிறகே வந்து பூனையை மீட்டெடுத்தனர். அதனால் நானே மரம் ஏறும் பயிற்சியை எடுத்துக்கொண்டேன். தினமும் ஒருமுறை நகரைச் சுற்றி வருவேன். ஏதாவது பூனை மரத்தில் மாட்டிக்கொண்டிருந்தால், அவற்றை உடனே மீட்டுவிடுவேன். பூனைகளுக்கு மரம் ஏறவும் தெரியும்; இறங்கவும் தெரியும். ஆனால் சில பூனைகள் மரக்கிளைகள், பொந்துகளில் சிக்கிக் கொள்வதுண்டு. சில பூனைகளுக்கு உயரமான இடத்திலிருந்து இறங்கத் தெரியாது. யாராவது உதவி செய்ய மாட்டார்களா என்று காத்திருக்கும். நான் பூனைகளை அதிகம் நேசிக்கிறேன். என்னால் பூனைகள் கஷ்டப்படுவதைச் சகித்துக்கொள்ள இயலாது. இப்போதெல்லாம் பூனைகளை மரங்களில் பார்த்தாலோ, தெருக்களில் ஆதரவு இன்றி சுற்றிக்கொண்டிருந்தாலோ என்னை அழைக்கிறார்கள். சிலர் நான் செய்யும் பணிக்குப் பணம் கொடுப்பார்கள். பணத்தை ஏற்றுக்கொள்வதில்லை. ஒரு பூனையை மீட்க குறைந்தது அரை மணி நேரம் ஆகும். சில பூனைகள் பயந்துகொண்டு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. அவற்றை மீட்க சில மணி நேரங்களாகும். பலரும் ஆபத்து நிறைந்த இந்தப் பணியை ஏன் செய்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். பூனைகளின் துயர் துடைக்கும் பணி ஆபத்தை விட முக்கியமானது என்று நினைக்கிறேன். இதில் எனக்குத் திருப்தி கிடைக்கிறது. என்னுடைய ஓய்வுக் காலம் மிகவும் உபயோகமாக இருக்கிறது. 4 ஆண்டுகளில் இதுவரை 150 பூனைகளை மீட்டிருக்கிறேன்” என்கிறார் ரான்டல் கோல்ப்.

பூனை மீட்பர்!

பெ

ண்கள் தங்கள் வயிற்றிலிருக்கும் குழந்தையை எப்போது கைகளில் ஏந்துவோம் என்று ஆர்வமாகக் காத்திருப்பார்கள். அவர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக, வயிற்றில் இருக்கும் குழந்தையை முப்பரிமாணத்தில் பொம்மையாக உருவாக்கித் தருகிறது ஒரு ரஷ்ய நிறுவனம். இதுவரை வயிற்றில் இருக்கும் குழந்தையை முப்பரிமாண பிளாஸ்டிக் பொம்மையாகத்தான் பலரும் உருவாக்கி வருகிறார்கள். ஆனால் இந்த நிறுவனம் தங்கம், வெள்ளி போன்ற விலைமதிப்பு மிக்கப் பொருட்களைப் பயன்படுத்தி பொம்மையை உருவாக்குகிறது. முகம், கைகள், கால்கள், நச்சுக்கொடி முதல் கொண்டு துல்லியமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ‘‘என் தோழி தன் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று அடிக்கடி சொல்லிவந்தார். அப்போதுதான் பிறக்காத குழந்தையை முப்பரிமாணத்தில் செய்துகொடுக்கும் யோசனை தோன்றியது. நாங்களும் ஆரம்பத்தில் பிளாஸ்டிக் பொம்மைகளைத்தான் உருவாக்கினோம். ஆனால் பெற்றோர் விலை மதிப்புமிக்கப் பொம்மைகளாகச் செய்துதரும்படிக் கேட்டனர். அதனால் தங்கம், வெள்ளியால் பூசப்பட்ட பொம்மைகளைச் செய்ய ஆரம்பித்தேன்” என்கிறார் இவான் க்ரிடின். “ஸ்கேன் செய்தபோது குழந்தையின் உருவம் எனக்குச் சரியாகத் தெரியவில்லை. ஆனால் பொம்மை கைக்கு வந்தபோது விவரிக்க இயலாத உணர்வைப் பெற்றேன். என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை” என்கிறார் யுலியான ரெகன்.

பிறக்காத குழந்தை பொம்மைகள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x