Published : 12 Mar 2018 02:32 PM
Last Updated : 12 Mar 2018 02:32 PM

ஜி ஜின்பிங் எங்கள் அதிபர் இல்லை- வலுவாக எதிர்க்கும் சீன மாணவர்கள்

சீனாவில் நிரந்தர அதிபராக ஜி ஜின்பிங் தொடர்வதற்கான தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் பலர் களமிறங்கியுள்ளனர்.

சீனா அதிபர் ஜி ஜின்பிங் தொடர்ந்து பதவியில் நீடிக்க வகை செய்யும் தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் 2023-ம் ஆண்டுக்கு பிறகும்தொடர்ந்து நிரந்தர அதிபராக அவர் நீடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

சீனாவில் அதிபர், துணை அதிபர் பதவிகளில் ஒருவர் 2 முறை மட்டுமே இருக்க வேண்டும். இரு முறைக்கு மேல் அதிபராக முடியாது என்று சீன அரசியல் சட்டத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாட்டை நீக்க ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்தது.

தற்போது சீன அதிபராக உள்ள ஜி ஜின்பிங் (64) கடந்த 2013-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரே ஆளும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராகவும் அதிபராகவும் பதவி வகிக்கிறார். செல்வாக்குமிக்கவர் என்று அவரை ஆளும் கட்சியினரே அறிவித்துள்ளனர்.

ஜி ஜின்பிங்கின் பதவி காலம் (2-வது முறை) வரும் 2023-ம் ஆண்டு முடிவடைகிறது. அதன்பின் அவர் அதிபர் பதவி வகிக்க முடியாது. மன்னராட்சியில் உள்ளது போல், கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் காலவரையின்றி தானே அதிபர் பதவி வகிக்க ஜி ஜின்பிங் முடிவெடுத்தார்.

 அதற்கேற்ப அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவும் ஒப்புதல் அளித்தது.

இதுதொடர்பான தீர்மானம் நாடாளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை கொண்டு வரப்பட்டபோது, மொத்தமுள்ள 3,000 பேரில் 2958 பேர் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இதன் மூலம் அதிபர் பதவியில் தொடர்ந்து நீடிக்க வகை செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு பல்வேறு மேற்கத்திய பல்கலைகக்ழகங்களில் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

"அந்தப் புகைப்படங்களில் அவர் எங்களுடைய அதிபர் கிடையாது. நான் இதை எதிர்க்கிறேன்" போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. இந்த வாசகங்கள் அமெரிக்கா, லண்டன், பிரான்ஸ், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா போன்ற பல்கலைக்கழங்களில் ஒட்டப்பட்டுள்ளது.

அப்பல்கலைக்கழகங்களில் பயிலும் சீன மாணவ, மாணவிகள் பலரும் ஜி ஜின்பிங்குக்கு எதிராக தங்கள் கருத்தைப்  பதிவிட்டு வருகின்றனர்.

ஜி ஜின்பிங் சீன் நிரந்தர அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்து ஆஸ்திரேலியாவில் பயிலும் சீன மாணவர் ஒருவர் கூறும்போது, ''ஜி ஜின்பிங் பதவிக்கு வந்தது முதல் சர்வாதிகாரியை போலதான் நடந்து கொள்கிறார். தற்போது எடுத்துள்ள முடிவு ஜி ஜின்பிங்குக்கு இன்னும் கூடுதல் அதிகாரத்தை கொடுத்துள்ளது'' என்றார்.

மேலும் ஜி ஜின்பிங் எங்கள் அதிபர் அல்ல என்ற பிரச்சாரத்தை வலியுறுத்து Xi's Not My President என்ற ட்விட்டர் பக்கமும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ட்விட்டர் பக்கத்தில் மேற்கூறிய பல்கலைkகழகங்களிலிருந்து சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு எதிரான வாசகங்கள் ஒட்டப்பட்ட புகைப்படங்கள் பதிவிடப்படுகின்றன.

இந்த ட்விட்டர் தளம் பெய்ஜிங்கிலிருந்து செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x