Published : 16 Mar 2018 08:55 AM
Last Updated : 16 Mar 2018 08:55 AM

பனாமா பேப்பர்ஸ் ஊழலில் சிக்கிய சர்வதேச சட்ட நிறுவனம் மூடல்

‘பனாமா பேப்பர்ஸ்’ ஊழலுக்கு காரணமான மொசாக் பொன்சேகா சட்ட நிறுவனம் மூடப்பட்டுள்ளது.

மத்திய அமெரிக்காவில் உள்ள மிகச் சிறிய நாடான பனாமாவில் கடந்த 1977-ம் ஆண்டில் மொசாக் பொன்சேகா சட்ட நிறுவனம் தொடங்கப்பட்டது. உலகம் முழுவதும் இந்த நிறுவனம் தனது கிளைகளைத் தொடங்கியது. கடந்த 2016 நிலவரப்படி மொசாக் பொன்சேகா சட்ட நிறுவனத்தில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருந்தனர்.

இந்த சட்ட நிறுவனம் மூலம் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்துகளை பதுக்கினர். இந்த முறைகேடுகள் ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற தலைப்பில் கடந்த 2016-ம் ஆண்டில் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

‘பனாமா பேப்பர்ஸ்’ பட்டியலில் இடம்பெற்ற ஐஸ்லாந்து பிரதமர் சிக்முண்டூர் டேவிட் குன்லாக்ஸன், பாகிஸ் தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி இழந்தனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் ஊழல் விவகாரத்தில் சிக்கினர்.

இதைத் தொடர்ந்து மொசாக் பொன்சேகா நிறுவனம் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அந்த நிறுவனத்தின் நடவடிக்கைகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டன. இந்தப் பின்னணியில் மொசாக் பொன்சேகா நிறுவனம் மூடப்பட்டிருக்கிறது.

அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், எங்கள் நிறுவனத்தின் நன்மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து எங்களால் மீள முடியாததால் நிறுவனம் மூடப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் எங்கள் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x