

‘‘இலங்கையில் போருக்குப் பின்னர் முஸ்லிம்களை இலக்கு வைத்து பேரினவாத சக்திகள் தாக்குதல் நடத்தி வருகின்றன’’ என்று ஐ.நா. குழுவினரிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் புகார் தெரிவித் தார்.
இலங்கையில் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது பெரும்பான்மை புத்த மதத்தினர் தாக்குதல் நடத்தினர். இதனால் நாட்டில் எமர்ஜென்சியை அறிவித்தார் அதிபர் மைத்ரிபால சிறிசேனா. கண்டி மாவட்டத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து வன்முறை ஏற்பட்டதை அடுத்து அந்தப் பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டது. தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார பிரிவு உதவி செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் மற்றும் அவர்களது குழுவினர் கடந்த 11-ம் தேதி இலங்கை வந்தனர். அவர்கள் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில், இலங்கை முஸ்லிம் அரசியல் பிரமுகர்களைச் சந்தித்து கண்டி, அம்பாறை பகுதிகளில் நடந்த தாக்குதல்கள் குறித்து கேட்டறிந்தனர்.
இச்சந்திப்பின் போது அமைச்சர்கள் ஏ.எச்.எம்.பௌசி, கபீர் ஹாசிம், ரிஷாத் பதியுதீன், பைசர் முஸ்தபா, நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் ஆகியோர் தங்கள் கருத்துகளை ஐ.நா. குழுவினரிடம் எடுத்துரைத்தனர். முஸ்லிம் காங்கிரஸ் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸும் இதில் கலந்து கொண்டார்.
ஐ.நா. உதவி செயலாளர் நாயகம் பெல்ட்மன் குழுவினரிடம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கூறியதாவது:
இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான போருக்குப் பின்னர் தற்போது முஸ்லிம்களின் உயிர் களுக்கும் உடைமைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் திட்டமிட்டு தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இலங்கையில் இனவாதம் ஆழமாக வேரூன்றிவிட்டது. அம்பாறை, கண்டி பகுதிகளில் தாக்குதல் நடந்தபோது சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கவில்லை. கண்டி, அம்பாறை பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளூர் மற்றும் அயலூர் பெரும்பான்மை சமூகத்தினரை அழைத்து வந்து தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையில் போர் முடிந்த பின்னர் 2012-ம் ஆண்டளவில் இருந்து இந்நாட்டு முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் அதிகரித்து விட்டன. கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக 350 சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றில் சம்பந்தப்பட்டவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் இங்கு ஜனநாயகத்தின் மீதும் அரசு மீதும் முஸ்லிம்கள் நம்பிக்கையிழந்து வருகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் திட்டமிட்ட குடியேற்றங்களின் காரணமாக அங்கு பெரும்பான்மையினராக வாழ்ந்து வந்த முஸ்லிம்களின் விகிதாசாரமும் குறைந்துவிட்டது.
இவ்வாறு ரவூப் ஹக்கீம் கூறினார்.
இவ்வாறு இனவாத தாக்குதல்கள் புத்தளம் மாவட்டத்தில் ஆனமடுவிலும் நடைபெற்றுள்ளது. இவற்றை இன்னமும் கட்டுப் படுத்த முடியாமல் இருப்பது கவலை அளிப்பதாக ஐ.நா. பிரதிநிதியிடம் முஸ்லிம் அமைச்சர்கள் சுட்டிக் காட்டினர்.
பின்னர் அவர்களிடம் ஜெப்ரி பெல்ட்மேன் கூறும்போது, ‘‘ நாட் டில் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்துக்கு இவ்வாறான வன்செயல்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. முஸ்லிம் அமைச்சர்கள் கூறிய கருத்துகள் குறித்து உரிய கவனம் செலுத்தப்படும்’’ என்று தெரிவித்தார்.