

சிரியாவில் போர் நிறுத்தம் தோல்வி அடைந்ததற்கு ரஷ்யாவே காரணம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து ஐ. நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறும்போது, "ரஷ்யாவால் அசாத் ஆட்சியில் மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ்கள் மீது கொடூரமான முறையில் குண்டுகள் வீசப்படுவதை தவிர்க்க முடியுமா? சிரியா தனது உடன்பாடுகளில் நிலையாக இருப்பதில்லை என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். அவர்கள் ஒப்பந்தங்களுக்கும் அவர்களது செயல்களுக்கும் ஒன்று போவதில்லை.
சிரியாவில் 30 நாள் போர் நிறுத்த ஒப்பத்தம் மீறப்பட்டிருப்பதற்கு ரஷ்யாவே காரணம். சிரிய கிராமங்களில் ரசாயன குண்டுகள் வீசப்படுவதை ரஷ்யா நிறுத்த வேண்டும்" என்று கூறினார்.
உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கவுடா பகுதியை மீட்பதற்காக, அந்நாட்டு அதிபரின் ஆதரவுப் படையினர் கடந்த 18-ம் தேதி முதல் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் 600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகி உள்ளனர். 1000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், சிரியாவில் 30 நாள் போர் நிறுத்தத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், காலை 9 மணி முதல் 2 மணி வரையில் (5 மணி நேரம்) மட்டும் போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என சிரியா அரசுப் படைக்கு ஆதரவாக சண்டையிடும் ரஷ்யா அறிவித்தது. இதுகடந்த மாதம் 27-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தகக்து.