Published : 27 Mar 2018 10:27 AM
Last Updated : 27 Mar 2018 10:27 AM

‘பேஸ்புக்’ தகவல்கள் திருடப்பட்ட விவகாரம் முழு பக்க விளம்பரம் கொடுத்து மன்னிப்பு கேட்ட மார்க் ஜுகர்பெர்க்

பேஸ்புக் தகவல்கள் திருடப்பட்ட விவகாரம் தொடர்பாக, அந்த நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுகர்பெர்க் முழு பக்க பத்திரிகை விளம்பரம் வெளியிட்டு மீண்டும் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இங்கிலாந்தின் ‘கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா’ என்ற அரசியல் ஆலோசனை வழங்கும் நிறுவனம் பேஸ்புக்கில் இருந்து 5 கோடிக்கும் அதிகமான பயனாளிகளின் தகவல்களை முறைகேடாக ஆய்வு செய்துள்ளது. அந்தத் தகவல்களை அமெரிக்கத் தேர்தலில் டொனால்டு டரம்ப்புக்கு ஆதரவாகப் பயன்படுத்தி உள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுபோல் இந்தியா உட்பட பல நாடுகளில் உள்ள அரசியல் கட்சிகளுக்கும் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம், மக்கள் மனதில் மாற்றத்தை, தாக்கத்தை ஏற்படுத்த வியூகம் வகுத்துக் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து பேஸ்புக்கின் நம்பகத்தன்மை கேள்விக்குறியானது. பலரும் பேஸ்புக் செயலியை நீக்கிவிட வேண்டும் என்று பிரச்சாரம் செய்யத் தொடங்கினர். இதனால் பேஸ்புக் நிறுவனத்தின் மதிப்பு சரிந்துள்ளது.

இந்நிலையில், தவறு நடந்து விட்டது மன்னித்து விடுங்கள். இனிமேல் தகவல்கள் திருடு போகாமல் பாதுகாக்கப்படும். அதற்கேற்ப புதிய கருவிகள், செயலிகள் பேஸ்புக்கில் செயல்படுத்தப்படும் என்று அந்த நிறுவனத்தின் தலைவர் ஜுகர்பெர்க் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் பத்திரிகையில் முழு பக்க விளம்பரம் வெளியிட்டு இங்கிலாந்து மக்களிடம் மார்க் ஜுகர்பெர்க் மன்னிப்பு கேட்டுள்ளார். தான் கையெழுத்திட்டு ‘தி அப்சர்வர்’ பத்திரிகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள விளம்பரத்தில், ‘‘உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது. அப்படி உங்கள் தகவல்களை எங்களால் பாதுகாக்க முடியாவிட்டால், இந்த நிறுவனத்தை நடத்தவே நாங்கள் தகுதியில்லாதவர்கள் ஆகிவிடுவோம்’’ என்று மார்க் ஜுகர்பெர்க் கூறியுள்ளார்.

விளம்பரத்தில் அவர் மேலும் கூறும்போது, ‘‘பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய செயலி மூலம் பேஸ்புக்கின் லட்சக்கணக்கான தகவல்கள் கடந்த 2014-ம் ஆண்டு கசிந்துவிட்டன.

இது நம்பிக்கை மீது நடந்த ஊடுருவல். அந்த நேரத்தில் நாங்கள் கடும் நடவடிக்கை எடுக்காததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.- ராய்ட்டர்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x