Published : 22 Mar 2018 10:52 AM
Last Updated : 22 Mar 2018 10:52 AM

‘‘தவறு நடந்து விட்டது, மன்னியுங்கள்’’ - 5 கோடி பேரின் தகவல் திருட்டு விவகாரத்தில் ஃபேஸ்புக் நிறுவனர் ஒப்புதல்

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்துடன் சேர்ந்து செயல்பட்டதில் ஃபேஸ்புக் பயன்படுத்தும் 5 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டதை ஒப்புக் கொண்டுள்ள அதன் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் அதற்காக மன்னிப்பு கோரியுள்ளார்.

இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற அரசியல் தகவல் ஆய்வு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அமெரிக்கத் அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் நிறுவனத்திடமிருந்து தகவல்களைப் பெற்று மக்கள் மனதில் மாற்றத்தை உண்டாக்கி தேர்தலில் முடிவுகள் மாற பெரிதும் துணை புரிந்தது.

இதில், 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது சுமார் 5 கோடி மக்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஃபேஸ்புக், தனது பயனாளர்களின் கணக்கில் உள்ள தகவல்களை அவர்களின் அனுமதியின்றி சோதனை செய்திருக்கிறது.

அமெரிக்கா மட்டுமின்றி ஜெர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுளகளிலும் நடைபெற்ற தேர்தல்களில் அனலிட்டிகா நிறுவனம் இதே போன்ற முறைகேடுகளை நடந்த்தியுள்ளதும் அம்பலமாகியுள்ளது. இந்தியாவிலும் சில தேர்தல்களில் அனலிட்டிகா நிறுவனத்தின் பங்களிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், கேம்பிர்ட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்துடன் இணைந்து, வரும் 2019-ம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்ளப்போகிறார் என்று பாஜக குற்றம் சாட்டுகிறது. இந்த விவகாரம் இந்தியாவிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள்ளது.

இந்த விவகாரம் 'ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. 'ஃபேஸ்புக் நிறுவனத்தின் பயனாளிகள் விவரங்களை வைத்துக் கொண்டு அந்நிறுவனம் பெருமளவில் வர்த்தகம் செய்துள்ளதையும், வணிக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து பல கோடி ரூபாய் பணம் குவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.

இதனால் 'ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக கண்டனக் குரல்கள் எழும்பி வருகின்றன. பங்குச்சந்தைகளில் அந்நிறுவனத்தின் பங்குகளும் பெருமளவு சரிந்துள்ளன. இதனால் 'ஃபேஸ்புக் நிறுவனம் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் தவறுகள் நடந்துள்ளதை ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் ஒப்புக்கொண்டுள்ளார்.

தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

‘‘கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிக்கா விவகாரத்தில் முக்கிய தகவலை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். மக்கள் அளிக்கும் தகவல்களைப் பாதுகாக்கும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. அதை சரியான முறையில் செய்யாவிடில் மக்களுக்கு சேவை செய்ய முடியாது. விவரங்கள் எப்படி பெறப்பட்டு அதனை எவ்வாறெல்லாம் பயன்படுத்தினார்கள் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்ககூடாது என்பதில் உறுதியாக உள்ளேன். இதற்கான நடவடிக்கையை முன்கூட்டியே எடுத்துள்ளோம். நாங்கள் சில தவறுகளையும் செய்துள்ளோம். அதை திருத்திக் கொள்ள வேண்டும். ஃபேஸ்புக் நிறுவனத்தை தொடங்கியவன் என்ற அடிப்படையில் தவறுகளுக்கு நான் பொறுப்பேற்கிறேன். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வோம்’’ எனக்கூறியுள்ளார்.

இதுபோலவே, டிவி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் ‘‘அனலிட்டிகா நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டதில் தவறுகள் நடந்துள்ளதை ஒப்புக் கொள்கிறேன். அதற்காக என்னை மன்னியுங்கள். இதுபோன்ற தவறு இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம்’’ எனக் கூறியுள்ளார்.

இதனிடையே ஃபேஸ்புக் விவகாரம் பெருமளவில் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் அந்த நிறுவத்தின் ரகசிய காப்பு பிரிவு துணைத் தலைவர் ரோப் ஷெர்மென் அமெரிக்க எம்.பிக்களை சந்தித்து பேசி வருகிறார். மேலும் அமெரிக்க அரசு அதிகாரிகளையும் சந்தித்து ஃபேஸ்புக் நிறுவனத்தின் மீதான புகார் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அதுபோலவே  சர்ச்சையில் சிக்கியுள்ள மற்றொரு நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா , புகாருக்கு ஆளான தலைமை செயல் அதிகாரி அலெக்சாண்டர் நெக்ஸ் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x