Published : 28 Mar 2018 08:38 AM
Last Updated : 28 Mar 2018 08:38 AM

உலக மசாலா: விரைவில் மீண்டு(ம்) வருவீர்கள் டைனமோ!

ங்கிலாந்தைச் சேர்ந்த மேஜிக் கலைஞர் டைனமோ உலகப் புகழ்பெற்றவர். தண்ணீரில் நடப்பார், அந்தரத்தில் பறப்பார், பாய்ந்துவரும் நீரைப் பனிக்கட்டியாக மாற்றுவார். மேஜிக் கலைஞர்களுக்குரிய ஆடைகளோ பேச்சோ ஆர்ப்பாட்டமோ இன்றி, வெகு எளிமையாக, அதே நேரத்தில் ஆச்சரியப்படுத்தும் வகையில் மேஜிக் செய்வதில் வல்லவர். 2011 – 2014 வரை உலகம் முழுவதும் ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி ‘டைனமோ: மேஜிசியன் இம்பாசிபிள்’. மிகச் சிறந்த நிகழ்ச்சிக்கான விருதை வென்றது. இந்தத் தொடருக்காக இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று, ஏழை எளிய மக்களை நேரடியாக சந்தித்து, மேஜிக் செய்து காட்டினார். இதன்மூலம் ஏராளமான மக்களின் மனதைக் கொள்ளைகொண்டார். இவருக்கு சிறு வயதிலிருந்தே குரோன் (Crohn’s disease) நோய் என்ற ‘குடலிய அழற்சி’ இருந்து வருகிறது. இந்த நோய்க்கு நிரந்தரத் தீர்வு இல்லை. 17 வயதில் வயிற்றுப் பகுதியில் பாதியை அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிட்டனர். கடினமான உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருந்துகள் மூலம் ஓரளவு நோயின் தீவிரத்திலிருந்து தப்பி வந்தார். ஆனாலும் ஒவ்வொரு நாளும் வயிற்று வலியுடன்தான் கண் விழிப்பார். இவரது தாத்தா மூலம் கற்றுக்கொண்ட மேஜிக் கலையிடம் வலியிலிருந்து தப்பிப்பதற்கு தஞ்சமடைந்தார். கொஞ்சம் கொஞ்சமாக புகழ்பெற்றார். இன்று உலக அளவில் ‘ஸ்டீவன் ஃப்ரேன்’ என்ற இயற் பெயர் மறைந்து ‘டைனமோ’ என்ற பட்டப்பெயர் நிலைபெற்றுவிட்டது. 34 வயதில் தற்போது மீண்டும் குரோன் நோய் தீவிரமாக தலைதூக்கி இருக்கிறது. இதற்காக சிகிச்சை எடுத்து வருகிறார். “கடுமையான நோய்தான். ஆனால் நேர்மறையான எண்ணங்களால் நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தமுடியும். எந்த நோயும் நம் மகிழ்ச்சியையும் தன்னம்பிக்கையையும் பாதித்துவிடாமல் பார்த்துக்கொண்டால் சமாளித்துவிடலாம்” என்று ஒருமுறை சொல்லியிருக்கிறார் டைனமோ. சிகிசைக்காக வெளியுலகில் தலைகாட்டாமல் இருந்தவர், தன்னுடைய சமீபத்திய படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

விரைவில் மீண்டு(ம்) வருவீர்கள் டைனமோ!

மெரிக்காவின் ஜார்ஜியா பகுதியைச் சேர்ந்த பகாரி வாரென் என்ற பெண்ணுக்கு இறை நம்பிக்கை அதிகம். கடவுள் இருக்கிறார் என்பதைத் தன் இரு குழந்தைகளுக்கு நிரூபிக்க நினைத்தார். காரின் பின் இருக்கையில் குழந்தைகளை அமர வைத்தார். பிறகு, “நான் காரை தந்திக் கம்பத்தில் மோதுவேன், நாம் உண்மையான கடவுள் விசுவாசிகள் என்பதால் இறைவன் நம்மை சிறு காயம் இன்றி காப்பாற்றிவிடுவார்” என்று கூறினார். சொன்னதுபோலவே வேகமாக காரை மோதினார். போக்குவரத்து காவலர்கள் ஓடிவந்தனர். பகாரி வாரெனை விசாரித்தனர். காரணத்தை என் ஃபேஸ்புக்கில் பார்த்துக்கொள்ளுங்கள் என்றார். சற்று கோணம் தவறியதால் பெரிய விபத்து ஏற்படவில்லை, இல்லையென்றால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்ற காவலர்கள், பகாரி வாரெனை சிறையில் அடைத்துவிட்டனர். குழந்தைகள் தாத்தா வீட்டில் விடப்பட்டிருக்கிறார்கள்.

ஐயோ… இப்படியா யோசிப்பார்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x