Published : 17 Mar 2018 12:59 PM
Last Updated : 17 Mar 2018 12:59 PM

எல்லை கடந்து இலங்கை ஆதரவு: காஷ்மீர் சிறுமிகளுக்கு ‘ரக்பி’ பயிற்சி அளிக்கிறார் முன்னாள் அதிபர் மகன்

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே காஷ்மீர் சிறுமி ரக்பி அணிக்கு பயிற்சி அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மகிந்திரா ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே சிறந்த ரக்பி வீரர். இவர் தற்போது இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பி.யாக இருந்து வருகிறார். இலங்கை ஆடவர் ரக்பி அணியின் முன்னாள் கேப்டனாகவும் நமல் ராஜபக்சே இருந்துள்ளார்.

இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தின் ரக்பி மகளிர் அணிக்கு தேவையான பயிற்சிகளை அளிப்பதாக நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இது குறித்து தி இந்து(ஆங்கிலம்) தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நமல் ராஜபக்சேவிடம் கேட்டபோது, அவர் கூறுகையில், ‘ காஷ்மீர் ரக்பி சிறுமிகள் அணிக்கு பயிற்சி அளிப்பது தொடர்பாக இலங்கையின் மூத்த பயிற்சியாளர் ரோனி இப்ராஹிமிடம் பேசி இருக்கிறேன். காஷ்மீர் வீராங்கனைகளுக்கு எவ்வித உதவிகள் தேவையோ அதை செய்ய தயாராக இருக்கிறோம்.

காஷ்மீர் வீராங்கனைகளுக்கு களத்துக்கு வந்து ரக்பி பயிற்சி அளிக்கவும் முயற்சித்து வருகிறோம். காஷ்மீரின் சூழலை அறிந்து அதை செயல்படுத்துவோம். சமூகத்தில் புனரமைப்பு, ஒற்றுமை, தலைமைப்பண்பு ஆகியவற்றை வளர்க்க விளையாட்டு முக்கியப் பங்காற்றும்’ ’ எனத் தெரிவித்தார்.

மேலும், சமூகத்தின் எல்லைகளைக் கடந்து, உணர்ச்சிமிக்க ரக்பி விளையாட்டுக்காக உதவுகிறோம் என்று நமல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நமல் ராஜபக்சே ஜம்மு காஷ்மீர் அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார். மே மாதம் காஷ்மீர் மாநிலத்துக்கு நமல் ராஜபக்சே வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி ட்விட்டரில் கூறுகையில், ‘ எங்கள் மாநிலத்தின் இளம் ரக்பி வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்க உதவும் நமல் ராஜபக்சேவுக்கு எங்களது நன்றியைத் தெரிவிக்கிறோம். இலங்கை அணி ஏராளமான வெற்றிகளைப் பெற்றுள்ளது. அனைத்து தரப்பினரும், இலங்கையின் அனுபவத்தையும், வெற்றிகளில் இருந்து பாடத்தையும் கற்க ஆர்வமாக இருக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x