Published : 03 Sep 2014 06:36 PM
Last Updated : 03 Sep 2014 06:36 PM

மிரட்டல்களுக்கு அமெரிக்கா எந்நாளும் அஞ்சாது: ஒபாமா

ஐ.எஸ்.ஐ.எஸ்-ஸின் அச்சுறுத்தல்களுக்கு தங்கள் நாடு எந்நாளும் அஞ்சாது என்றும், அமெரிக்கர்கள் ஒன்று திரண்டு அந்த கொடூர இயக்கத்தை அழிப்பார்கள் என்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரித்துள்ளார்.

இராக் நகரங்களை கைப்பற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள், மேலும் ஒர் அமெரிக்க பத்திரிகையாளரை படுகொலை செய்து, >'அமெரிக்காவுக்கு 2-வது தகவல்' என்ற வீடியோ பதிவை நேற்று (செவ்வாய்) வெளியிட்டனர்.

இந்த நிலையில் உக்ரைன் பிரச்சினையில் ரஷ்யாவின் தலையீடு குறித்து, பேச்சுவார்த்தை நடத்த ஐரோப்பா புறப்பட்ட அமெரிக்க அதிபர் ஒபாமா, பயணத்தின்போது செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, "அவர்களின் இறப்பு அமெரிக்கர்களை ஒன்று சேர்க்குமே தவிர அச்சுறுத்தி விடாது. அவர்களுக்கு பதிலடி கொடுக்க கால தாமதம் ஏற்பட்டாலும், நீதிக்கு எந்த நாளிலும் வழி கிடைத்துவிடும். இவர்களை அழிக்க நேரமும் முயற்சிகளும் தேவை.

அவர்களின் கொடூர செயல்களுக்கு அஞ்சி, தாக்குதல்களை நிறுத்தும் எண்ணமே இல்லை. அவர்களின் போக்கு காட்டுமிராண்டித்தனத்தையும் தெளிவான நோக்கமும் இல்லாததையே நிரூபிக்கின்றது.

எங்களின் லட்சியம், ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்களால் எந்த நாடும் பாதிக்கப்படக் கூடாது என்பது தான். அவர்களுக்கு எதிரான பயணத்தில் அமெரிக்கா வெகுதூரம் செல்ல வேண்டி உள்ளது. பத்திரிகையாளர்களின் இழப்புக்கு நாங்கள் பயந்துவிட மாட்டோம். மாறாக, ஒன்றிணைந்த அந்த இயக்கத்தை அழிப்போம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x