Published : 14 Sep 2014 02:46 PM
Last Updated : 14 Sep 2014 02:46 PM

தற்கொலை செய்து கொண்ட இந்திய நர்ஸ் குடும்பத்துக்கு ஆஸி. வானொலி ரூ. 3 கோடி இழப்பீடு: இங்கிலாந்து இளவரசி கர்ப்பமான தகவல் கசிந்த விவகாரம்

இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டன் கர்ப்பம் குறித்த விவரங்களை ஆஸ்திரேலியா நாட்டு வானொலி நிலையத்துக்கு வழங்கிய விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்ட இந்திய நர்ஸின் குடும்பத்துக்கு அந்த வானொலி நிலையம் ரூ.3 கோடி இழப்பீடு வழங்கியுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டன் தனது முதல் பிரச வத்தின்போது லண்டனில் உள்ள கிங் எட்வர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு இந்தியரான ஜசிந்தா சல்டான்ஹா (46) நர்ஸாகப் பணிபுரிந்து வந்தார்.

இளவரசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதைத் தெரிந்துகொண்டு ஆஸ்திரேலியா நாட்டின் 'சதர்ன் கிராஸ் ஆஸ்டீரியோ' எனும் வானொலி நிலையத்தைச் சேர்ந்த க்ரெய்க் மற்றும் மைக்கேல் கிறிஸ்டியன் எனும் இரண்டு தொகுப்பாளர்கள் எலிசபெத் ராணியைப் போலவும், இளவரசர் சார்லஸைப் போலவும் குரல் மாற்றி மருத்துவமனைக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர்.

அந்த அழைப்பை ஏற்ற ஜ‌சிந்தா, உண்மை என்னவென்று அறியாமல் இளவரசியின் உடல்நலம் குறித்து சில தகவல்களை வெளியிட்டார். இது அப்போது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

இதனால் தன் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமோ என்று அஞ்சிய ஜசிந்தா தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில் தனது தவறை உணர்ந்த அந்த வானொலி நிலையம் சமீபத்தில் ஜசிந்தாவின் குடும்பத்தினருக்கு ரூ. 3 கோடி இழப்பீடு வழங்கியுள்ளது.

இதுகுறித்து அந்த வானொலி நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 'ஜசிந்தாவின் குடும்பத்துக்கு வழங்கப்படும் இத்தொகை அவரின் இழப்பை ஈடு செய்யாது என்று தெரியும். எனினும், அவர்கள் ஜசிந்தாவின் இழப்பில் இருந்து மீண்டு வர இத்தொகை பயன்படும் என்று நம்புகிறோம்' என்று கூறியுள்ளார்.

நடந்த தவறுக்கு முழு பொறுப் பேற்றுக் கொண்ட அந்த வானொலி நிலையம் குற்றம் செய்த அந்த இரண்டு தொகுப்பாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x