Published : 17 May 2019 03:22 PM
Last Updated : 17 May 2019 03:22 PM

கல்வி, திறமைகள், ஆங்கிலத்தில் சரளமான அறிவு.. இன்னபிற தகுதிகள் தேவை: கிரீன் கார்டு பெற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்மொழியும் புதிய நிபந்தனைகள்

அமெரிக்கக் குடியுரிமைக்கான கிரீன் கார்டு வழங்குதலில் தகுதி, திறமை அடிப்படையிலான பல்வேறு காரணிகளை உள்ளடக்கி அதிபர் ட்ரம்ப் புதிய முன்மொழிவுகளை பரிந்துரை செய்துள்ளார்.

 

குடும்ப அடிப்படையில் கிரீன் கார்டு வழங்கும் நடைமுறைகளுக்குப் பதிலாக பிற காரணிகளுடன் கல்வி, தனிப்பட்ட திறமைகள், ஆங்கிலத்தில் சரளம் மற்றும் அறிவு ஆகிய தகுதி-திறமை அடிப்படையிலான கிரீன் கார்டு வழங்கும் முறையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்மொழிந்துள்ளார்.

 

ரோஸ் கார்டனில் மூத்த நிர்வாக அதிகாரிகள், செல்வாக்கு மிக்க ஹில் குடியரசுவாதிகள் ஆகியோர் முன்னிலையில் இந்தப் புதிய பரிந்துரைகளை அதிபர் ட்ரம்ப் முன் மொழிந்ததோடு எல்லைப் பாதுகாப்பு மேம்பாடு, புகலிடம் கோருவோருக்கான புதிய விதிமுறைகள் என்று இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

 

கிரீன் கார்டு வழங்குதலில் திறமை அடிப்படையிலான புதிய காரணிகளைச் சேர்ப்பதன் மூலம் கிரீன் கார்டு வழங்கப்படும் எண்ணிக்கையில் பெரிய அளவில் குறைவு இருக்காது என்று கூறப்படுகிறது. 2017-ல் 1.1 மில்லியன் கிரீன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன, அந்த எண்ணிக்கையில் குறைவு இருக்காது என்று தெரிகிறது.

 

தற்போது கிரீன் கார்டு பெற்றவர்களில் 12% மக்கள் அமெரிக்காவுக்குள் திறமை அடிப்படையிலான எச்1பி விசா மூலம் நுழைந்தவர்கள். 66% குடும்ப அடிப்படையிலான கிரீன் கார்ட் பெற்றவர்களாவார்கள். இந்த புதிய முன்மொழிவின் மூலம் திறமை அடிப்படையிலான கிரீன் கார்டு வழங்கல் 57% அதிகமாகும் என்று கூறப்படுகிறது.

 

விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது கல்வி, பணி அனுபவம், வயது, (இளம் பணியாளர்களுக்கு அதிகப் புள்ளிகள்), ஆங்கில மொழித்திறன், இன்னபிறவற்றின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும்.  புதிதாகக் குடியேறுபவர்கள் தங்களை தாங்களே காப்பாற்றிக் கொள்ள நிதியாதாரம் இருக்கிறது என்பதை உறுதி செய்வது அவசியம்.  மேலும் இவர்கள் சிவிக்ஸ் பரீட்சையில் தேர்வாக வேண்டியதும் அவசியம்.

 

இதைத் தவிர ‘அமெரிக்காவைக் கட்டமைப்போம்’ அதாவது பில்ட் அமெரிக்கா வீசா ஒன்றும் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் விவரங்கள் வியாழக்கிழமை வெளியிடப்படவில்லை.  மனிதார்த்த அடிப்படையிலும், பன்மைத் தன்மை அடிப்படையிலும் கிரீன் கார்டு வழங்கப்பட்டவர்கள் தற்போது மொத்த கிரீன் கார்டு ஹோல்டர்களில் 10% மட்டுமே.

 

திறமை அடிப்படையில் 2018-ல் 70% எச்1பி விசா இந்தியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலும் கிரீன் கார்டாக மாற்றப்பட்டுள்ளது.  இந்தப் புதிய முறை புள்ளிகள் அடிப்படையிலான கிரீன் கார்டு நடைமுறைகளில் இந்தியர்கள் அங்கு செட்டில் ஆனாலும் வயதான பெற்றோரை அங்கு அழைத்துச் செல்ல முடியுமா என்பது பற்றி தெளிவாக எதுவும் இல்லை.  மனைவிகள் மற்றும் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

 

“ட்ரம்ப்பின் இந்தப் புதிய திட்டம் சட்டமானால்  முதலில் எச்1பி விசா மூலம் அமெரிக்கா வந்து செட்டில் ஆனவர்கள் உட்பட பலரும் அமெரிக்காவில் தங்கள் பெற்றோர், குழந்தைகளுடன் இருக்க முடியாது” என்று அமெரிக்கக் குடியுரிமைக்காக கிரீன் கார்ட் பெற்றுத்தரும் நிறுவனத்தின் இணை நிறுவனர் டக் ராண்ட் தெரிவித்துள்ளார்.

 

ஆனால் டக் ராண்ட் மேலும் கூறும்போது, “இது சட்டமாக வர வழியில்லை என்றே நான் நினைக்கிறேன். அதாவது உயர் திறமை அடிப்படையில்தான் குடியேற்ற விதிகள் கடைபிடிக்கப்படுகின்றன என்பதைக் காட்டுவதற்கான வெறும் உதட்டுச் சேவைதான் இது. ஆனால் அதிபர் ட்ரம்ப் தன்னிடம் உள்ள அனைத்து உத்திகளையும் கொண்டு உயர் திறமை குடியேற்றத்தை தடுத்து வருவதே அங்கு நடைபெற்று வருகிறது” என்று தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவித்தார்.

 

புதிய குடியேற்ற விதிமுறைகளை வடிவமைப்பவர்கள் ட்ரம்ப்பின் மருமகன் மற்றும் ஆலோசகர் ஜாரெட் குஷ்னர் மற்றும் ட்ரம்பின் மூத்த ஆலோசகர் ஸ்டீபன் மில்லர் ஆகியோர்களாவார்கள், இவர்கள் அதி தீவிர வலதுசாரிகளாவார்கள் என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

ட்ரம்ப்பின் இந்த புதிய கிரீன் கார்டு முன்மொழிவுகள், புதிய குடியேற்ற விதிகள், எல்லைப் பாதுகாப்பு ஆகியவை முழுதும் நடைமுறைப்படுத்தப்பட முடியாதது என்றே அங்கு ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன.

 

மூலம்: தி இந்து ஆங்கிலம்;

கட்டுரை ஆசிரியர்: ஸ்ரீராம் லஷ்மண்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x