Published : 02 May 2019 03:47 PM
Last Updated : 02 May 2019 03:47 PM

மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்ததில் இந்தியாவுக்கு வெற்றி இல்லை: பாகிஸ்தான்

ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா சபை  அறிவித்ததில் இந்தியாவுக்கு ஒரு  வெற்றியும் இல்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா சபை இன்று அறிவித்தது. 

மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க கடந்த 4 முறை முட்டுக்கட்டை போட்டுவந்த சீனா இறுதியாக ஒப்புக்கொண்டது.

ஜம்மு காஷ்மீர், புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில்ன் பாலகோட் பகுதியில் செயல்பட்டுவரும் ஜெய்ஷ் இ முகமது முகாம்களை இந்திய விமானப்படை கடந்த மாதம் 26-ம் தேதி குண்டுவீசி அழித்ததாகக் கூறப்பட்டது.

இந்த சூழலில், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 27-ம் தேதி ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரி அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து  உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தன.

10 நாட்களுக்குள் ஐ.நா.வில் உள்ள உறுப்பு நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்தால், தீர்மானம் குறித்து ஆய்வு செய்யப்படுவதாக இருந்தது. ஆனால், சீனா  தொழில்நுட்ப ரீதியாக சில கேள்விகளை முன்வைத்து தனது வீட்டோ அதிகாரத்தால் தீர்மானத்தை நிறைவேற்றவிடாமல் தடுத்தது.

இந்த நிலையில் ஐ.நா.வின் நிரந்தர உறுப்பினரான சீனா, கடந்த காலங்களில் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க விதித்துவந்த முட்டுக்கட்டைகளை விலக்கிக்கொள்ள முன்வந்தது. இதையடுத்து மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா குழு முறைப்படி அறிவித்தது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் முகமத் ஃபைசல் கூறும்போது” இதில் இந்தியாவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் இந்திய ஊடகங்கள் இந்தியாவுக்கு கிடைத்த வெற்றியாக விவரிப்பது முற்றிலும் தவறானது. அடிப்படையற்றது. 

பிரதமர் இம்ரான்கானின் நிலைப்பாடு நிலையாக உள்ளது. எந்த தடைச் செய்யப்பட்ட அமைப்பும் பாகிஸ்தானில் செயல்பட இடமில்லை என்பது எங்கள் தேசிய செயல் திட்டத்தில் உள்ளது”என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x