வர்த்தகப் போர்; அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: சீனா

வர்த்தகப் போர்; அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: சீனா

Published on

அமெரிக்காவுடன் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவுக்கான சீனத் தூதர் கூறும்போது, ''சீனா- அமெரிக்காவுக்கு இடையே நடக்கும் வர்த்தகப் போர் காரணமாக சீனாவில் உள்ள முக்கிய அமெரிக்கத் தொழிலதிபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை முடிவுக்குக் கொண்டுவர சீனா- அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்குத் தயாராகவே உள்ளது.  எங்களது கதவுகள் திறந்தே உள்ளன'' என்று தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் 10-ம் தேதி வர்த்தகம் தொடர்பாக சீனா - அமெரிக்கா இடையே நடந்த சந்திப்புக்குப் பிறகு எந்த முக்கியப் பேச்சுவார்த்தையும் இரு நாடுகளுக்கிடையே நடக்கவில்லை.

மேலும் அதே நாளில் ட்ரம்ப் சீன இறக்குமதிப் பொருட்களுக்கு வர்த்தக வரியை அதிகரித்தார்.

முன்னதாக, சீனத்திலிருந்து இறக்குமதியாகும் சூரிய ஒளி மின்சாரத் தயாரிப்புச் சாதனங்கள், சலவை இயந்திரங்கள் ஆகியவற்றின் மீது ஜூலை மாத இறுதியில் அமெரிக்கா காப்பு வரி விதித்தது. சீனத்தின் அனைத்துப் பொருட்கள் மீதும் அடுத்து வரி விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.

அமெரிக்காவின் இந்நடவடிக்கைக்கு சீனத் தரப்பிலிருந்து கடும் எதிர்வினை வந்தது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோயா பீன்ஸ், மோட்டார் வாகனங்கள், உதிரி பாகங்கள் போன்றவற்றுக்கு சீனாவும் காப்பு வரி விதித்தது. இதனால் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்தம் வண்ணம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in