

அமெரிக்கப் போர்க் கப்பல்களை ஈரான் மூழ்கடிக்கும் என்று அந்நாட்டு ராணுவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஈரான் ராணுவ வல்லுநர்கள் கூறும்போது,“ ஈரானின் ஏவுகணைகள் குறித்து கவலைகள் இருந்த போதிலும் அரபிக் கடலில் உள்ள அமெரிக்கப் போர்க் கப்பலை ஈரான் தனது ரகசிய ஆயுதங்களைப் பயன்படுத்தி மூழ்கடிக்கலாம் ” என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் ஈரான் ராணுவ ஆலோசகர் மோர்டாசா கூறும்போதும், “அமெரிக்கா இந்தப் பிராந்தியத்துக்கு இரண்டு போர்க் கப்பல்களை அனுப்பியுள்ளது. அவர்கள் சிறிதேனும் தவறு இழைத்தால் நாங்கள் அவர்களது போர்க் கப்பல்களையும் அவர்களது வீரர்களையும் நீருக்கு அடியில் அனுப்புவோம்” என்றார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்து வந்த ட்ரம்ப் ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது. இந்த நிலையில் அணு ஆயுத ஒப்பந்தத்தில் பிற நாடுகளின் ஆதரவுடன் ஈரான் தொடர்ந்து வருகிறது.
இதில் விதிமுறைகளைப் பின்பற்ற முடியாது என்று சமீபத்தில் கூறியது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் மோதல் அதிகமாகி உள்ளது.