குண்டுவெடிப்பு தீவிரவாதிகள் இந்தியாவில் பயணம் செய்தனர்: இலங்கை ராணுவ தளபதி உறுதி

குண்டுவெடிப்பு தீவிரவாதிகள் இந்தியாவில் பயணம் செய்தனர்: இலங்கை ராணுவ தளபதி உறுதி
Updated on
1 min read

இலங்கை தற்கொலைப் படை தீவிரவாதிகள் இந்தியாவின் காஷ்மீர், கேரளா, பெங்களூரு போன்ற இடங்களுக்கு பயிற்சி எடுப்பதற்காகச் சென்று வந்தனர் என்று அந்நாட்டு ராணுவ தளபதி தெரிவித்தார்.

இதுகுறித்து இலங்கை ராணுவ தளபதி மகேஷ் சேனாயக் கூறும்போது, ''இலங்கையில் குண்டுவெடிப்பு நடத்திய தீவிரவாதிகளில் சிலர் இந்தியாவுக்குப் பயணம் சென்றுள்ளனர். காஷ்மீர், பெங்களூரு, கேரளாவுக்கும் அவர்கள் சென்றதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அவர்கள் பயிற்சி எடுப்பதற்காக அல்லது சர்வதேச தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு ஏற்படுத்துவதற்காக சென்று இருக்கலாம்'' என்றார்.

இதன் மூலம் இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட தீவிரவாதிகள் இந்தியா சென்று வந்ததை இலங்கை ராணுவம் முதல் முறையாக உறுதி செய்துள்ளது.

இலங்கை ஏன் தீவிரவாத தாக்குதலுக்கு தற்போது இலக்காகி உள்ளது என்ற கேள்விக்குப் பதிலளித்த ராணுவ தளபதி, ''இங்கு அதிகபட்ச சுதந்திரம் நிலவுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இங்கு அமைதி நிலவுகிறது. மக்கள் அமைதியைக் கொண்டாடுகிறார்கள்.

இந்த நாட்டில் கலவரமோ, வன்முறையோ இல்லை என்ற நம்பிக்கையை மக்களுக்கு நாங்கள் அளிக்கிறோம். மக்கள் இலங்கை பாதுகாப்புப் படை மீது, போலீஸ் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். அவர்கள் விரைவில் இயல்பு நிலைக்கு நாட்டைக் கொண்டு வந்துவிடுவார்கள்'' என்றார்.

ஈஸ்டர் தினத்தன்று  இலங்கையில் கிறித்தவ தேவாலயம்,  நட்சத்திர ஓட்டல்கள்  உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 253 பேர் உயிரிழந்தனர். ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்றது.

இலங்கையிலுள்ள என்.டி.ஜே. அமைப்புக்கும் இதில் தொடர்புள்ளதாக இலங்கை அரசு அந்த அமைப்பைத் தடை செய்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in