Published : 03 May 2019 04:52 PM
Last Updated : 03 May 2019 04:52 PM

இரண்டு தலை, மூன்று கண்களா?- வைரலாகும் மலைப்பாம்பு புகைப்படம்

ஆஸ்திரேலியாவின் ஆர்ன்ஹெம் நெடுஞ்சாலையில் மலைப்பாம்பு ஒன்று மூன்று கண்களுடன் இருந்தது அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுதொடர்பான பாம்பின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

வடக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பகுதி ஹம்ப்டி டூ. அங்குள்ள ஆர்ன்ஹெம் நெடுஞ்சாலையில் கடந்த மார்ச் மாதத்தில் மூன்று கண்களைக் கொண்ட பாம்பொன்று நடமாடியது. இதைப் பார்த்த அதிகாரிகள், அதைப் பத்திரமாகப் பிடித்து அருகிலுள்ள வடக்கு எல்லைப் பகுதி வனவிலங்குகள் பூங்காவில் ஒப்படைத்தனர்.

இதுதொடர்பாக பூங்கா அதிகாரிகள் கூறுகையில், ''இந்த வகைப் பாம்பு அசாதாரணமானது. இந்தப் பாம்புக்கு 3 கண்கள் இருப்பது இயற்கையான உருமாற்றத்தால் ஏற்பட்டது. 40 செ.மீ. நீளம் (15 இன்ச்) கொண்ட இந்தப் பாம்பு, உணவு உண்ண முடியாமல் சிரமப்பட்டது. தன்னுடைய குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பாம்பு, மார்ச்சில் கண்டெடுக்கப்பட்ட சில வாரங்களில் உயிரிழந்தது'' என்று தெரிவித்தனர்.

வடக்கு எல்லைப் பகுதி வனவிலங்குகள் பூங்காவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில், ’’3 கண்கள் கொண்ட பாம்பு, பஞ்சம் வரும் என்று எச்சரிக்கிறது’’ என பதிவிடப்பட்டுள்ளது.

மேலும், பாம்பின் எக்ஸ்ரே எடுக்கப்பட்டபோது வெளியான தகவல்களும் கூறப்பட்டுள்ளன. அதன்படி, ''அந்த பாம்புக்கு இரண்டு தலைகள் ஒன்றாக இல்லை. ஒரேயொரு தலையுடன் கூடுதலாக ஒரு கண் இயற்கையாகவே உருவாகியுள்ளது. மூன்று கண்களும் நன்றாகச் செயல்பட்டு வந்தன'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x