

வங்கக்கடலில் ஃபானி புயல் உருவானது முதலே இந்திய வானிலை ஆய்வு மையம் துல்லியமாக கணித்து இடைவிடாமல் தகவல்களை தந்ததால் பெருமளவு உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக ஐ.நா பாராட்டு தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான ஃபானி புயல் நேற்று ஒடிசாவில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 245 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக 6 பேர் உயிரிழந்தனர். 160 பேர் படுகாயம் அடைந்தனர்.
தலைநகர் புவனேஸ்வர் உட்பட 52 நக ரங்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் மரங்கள், மின் கம்பங்கள், தொலைத்தொடர்பு கோபுரங்கள் முறிந்து விழுந்தன. அந்த நகரங்கள், கிராமங் களில் சாலை போக்குவரத்து முற்றிலு மாக முடங்கியது. பல்வேறு பகுதி களில் தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டது.
14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முழு வீச்சில் நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன. பொருளாதார ரீதியாக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளபோதிலும், பெருமளவு உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதற்கு முன்கூட்டியே பெருமளவு மக்கள் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டதே காரணம்.
12 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். கடுமையான புயல் காரணமாக ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டது. 147 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த முன்னெச்சரிக்கைகள் பெருமளவு கைகொடுத்துள்ளன.
இதுகுறித்து ஐ.நா.வுக்கான பேரிடம் மீட்பு குழு தெரிவித்துள்ளதாவது:
மிக அதீத புயலை உயிரிழப்பு பெரிய அளவில் இல்லாமல் இந்தியா எதிர்கொண்டுள்ளது. மிக துல்லியமாக முன்கூட்டியே இந்திய வானிலை மையம் புயல் நகர்வுகளை கண்காணித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளிகள், விமான நிலையங்கள் மூடப்பட்டன.
போக்குவரத்து நிறுத்தப்பட்டது உயிரிழப்புக்களையும், காயங்களையும் தவிர்த்துள்ளது. பொருட்சேதம் அதிகம் இருப்பினும் உயிர் சேதம் இல்லாதது பாராட்டுக்குரியது. பெரிய அளவில் மக்களவை வெளியேற்றி அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வழங்குவது சாதாரண காரியமல்ல. இதனை வெற்றிகரமாக இந்தியா மேற்கொண்டுள்ளது. முன்கூட்டியே புயலை சரியான முறையில் கணித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் நடவடிக்கை உதவியது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.