

இஸ்லாம் மதத்தை அவதூறாகப் பேசியதாக சிறை தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட அசியா பீபி கனடாவில் அடைக்கலம் புகுந்துள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தானின் டான் ஊடகம், ''அசியா பீபி நாட்டை விட்டுச் சென்றுவிட்டார். அவர் இப்போது சுதந்திர மனிதர்'' என்று தெரிவித்துள்ளது.
அசியா பீபியின் வழக்கறிஞரும் அவர் தற்போது கனடாவில் இருப்பதாக உறுதி செய்துள்ளார்.
இஸ்லாம் மதத்தை அவதூறாகப் பேசியதாகக் கூறி பாகிஸ்தான் மத நிந்தனைச் சட்டத்தின் கீழ் அசியா பீபி மீது கடந்த 2009-ல் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து அவருக்கு உள்ளூர் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது. அதை லாகூர் உயர் நீதிமன்றம் 2010-ல் உறுதி செய்தது.
இந்நிலையில் இதை எதிர்த்து அசியா பீபி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. 9 ஆண்டுகளாக சிறையில் இருந்த அவர் உடனடியாக விடுதலையானார். தற்போது அவர் கனடாவில் அடைக்கலம் புகுந்தார்.