

சிரியாவில் அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் குடும்பத்தினர் அனைவரும் இறந்த நிலையில் சிறுமி மட்டும் மீட்கப்பட்டுள்ளார்.
சிரியாவின் வடக்கு மாகாண இட்லிப் மற்றும் ஹமாவில் சிரிய மற்றும் ரஷ்யப் படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இந்தத் தாக்குதலில் கட்டிடத்தின் இடிபாடுகளிலிருந்து சிறுமி ஒருவர் மீட்கப்பட்ட வீட்யோவை பிபிசி வெளியிட்டுள்ளது. அவரது பெயர் கதீஜா.
கதீஜாவைத் தவிர அவரது குடும்பத்தினர் அனைவரும் அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டனர். இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் பலர் இறந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.
இந்நிலையில் ஐஎஸ் வசமுள்ள மற்ற பகுதிகளை மீட்க இறுதிப் போர் நடத்தப்பட்டு வருகிறது.