

தென்னாப்பிரிக்காவில் அடுத்த மாதம் நிகழவிருக்கும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் செல்லும் திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்கா கேப் டவுனில் அடுத்த மாதம் 'அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்களின் உலகளாவிய உச்சி மாநாடு' நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டெஸ்மாண்ட் டுடூ, நெல்சன் மண்டேலா, எஃப்.டபிள்யூ. தி கிளெர்க் மற்றும் ஆல்பர்ட் லுதுலி ஆகிய நான்கு நோபல் பரிசாளர்களின் அறக்கட்டளை மேற்கொள்கிறது. இதில் 13 தனிநபர்களும் 8 அமைப்புகளும் கலந்துகொள்கின்றன.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ள நோபல் பரிசு பெற்ற மனித உரிமை ஆர்வலரும் மதத் தலைவருமான தலாய் லாமா முடிவு செய்திருந்தார். ஆனால் அவருக்கான விசாவை வழங்க தென்னாப்பிரிக்க அரசு மறுத்துள்ளது. தலாய் லாமாவுக்கு விசா வழங்கினால், சீனா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான வர்த்தக உறவு சீர்குலைய நேரிடலாம் என்று தென்னாப்பிரிக்கா அஞ்சுவதே இந்த விசா மறுப்புக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
நெல்சன் மண்டேலாவின் காலத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு தலாய் லாமா வந்திருக்கிறார். எனினும், கடந்த 2009, 2011 ஆகிய ஆண்டுகளில் அவருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.
திபெத்தின் விடுதலைக்காகப் போராடும் தலாய் லாமாவுக்கு எதிராகத் தன்னுடைய பொருளாதார மற்றும் அரசியல் பலத்தைப் பயன்படுத்தி அவருடனான தொடர்புகளை முறித்துக்கொள்ள உலக நாடுகளுக்கு சீனா அழுத்தம் தந்து வருவது குறிப்பிடத்தக்கது.