Published : 31 May 2019 04:57 PM
Last Updated : 31 May 2019 04:57 PM

மோடியின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்: இலங்கை அதிபர் சிறிசேனா

 

 

மோடியின் வருகைக்காக ஆவலுடன் காத்திருப்பதாக இலங்கை அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.

 

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை பலத்தை காட்டிலும் அதிக தொகுதிகளில் அக்கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

 

குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று நடந்த பதவி ஏற்பு விழாவில் மோடிக்கு, குடியரசுத் தலைவர்  ராம்நாத் கோவிந்த் பிரதமராக பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதன்மூலம் அவர் தொடர்ந்து 2-வது முறையாக பிரதமர் ஆனார். இந்த விழாவில்  பிம்ஸ்டெக் நாடுகள் பட்டியலில்உள்ள வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம் மற்றும் பூடான் நாட்டுத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

 

இதைத்தொடர்ந்து நேபாளம், இலங்கை ஆகிய நாட்டினரோடு இரு தரப்புப் பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்றது. இந்நிலையில் மோடி மீண்டும் பிரதமரானது குறித்துப் பேசிய இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, ''பிரதமர் மோடி இலங்கை வருவது எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்தியர்களும் இலங்கை மக்களும் அண்டை நாட்டுக்காரர்கள், நண்பர்கள். சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்திய இலங்கை உறவு இருந்திருக்கிறது.

 

மோடியின் இலங்கை வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். இது இலங்கை மக்களுக்கு பெருமை தரும் விஷயம் ஆகும். உலகின் அனைத்து ஜனநாயக நாடுகளும் தீவிரவாதத்துக்கு எதிராகப் போராட வேண்டும். வலிமையான நாடுகளோ, சிறிய நாடுகளோ தீவிரவாதத்துக்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும்.

 

உலகம் முழுவதும் தீவிரவாதம் வெவ்வேறு வடிவங்களில் பரவிக் கிடக்கிறது. சில நாடுகளில் வீட்டுக்குள்ளேயே தீவிரவாதிகள் இருக்கின்றனர். சர்வதேசத் தீவிரவாதம் எப்படி முளைக்கிறது என்பது பிரச்சினை இல்லை. ஆனால் அது அனைவரையும் பாதிக்கிறது'' என்றார் சிறிசேனா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x