

மனிதர்களின் இரக்கமற்ற பொருளாதார வளர்ச்சி, அதனால் ஏற்பட்ட பருவநிலை மாற்றத்தால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த பூமிப்பந்தில் உள்ள 10 லட்சம் உயிரினங்கள் அழிவின் விளிம்பில் சிக்கி இருக்கின்றன என்று ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.
இயற்கை சூழ்ந்த எழில்கொண்ட உலகில், மனிதர்களின் நவீன நாகரீக குடியேற்றத்தால், ஏற்பட்ட சேதங்களையும், இயற்கைக்கும், உயிரினங்களுக்கும் விளைந்த பாதிப்புகளையும் குறித்த மைல்கல் அறிக்கையை அறிவியல் விஞ்ஞானிகள் நேற்று தாக்கல் செய்துள்ளனர்.
உலகப் பொருளாதாரம், நிதி சூழலில் பரந்த அளவில் நடக்கும் உருமாற்றம் உயிர்சூழலை பாதகமான நிலைக்கு தள்ளி, எதிர்கால மனித சமூகத்துக்கு மோசமான நிலையை ஏற்படுத்தும் என்று அறிக்கையில் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த அறிக்கையை அமெரிக்கா, சீனா, ரஷியா உள்ளிட்ட 130 நாடுகள் வரவேற்றுள்ளன.
50 நாடுகளைச் சேர்ந்த 145 அறிவியல் விஞ்ஞானிகள், பல்துறை வல்லுநர்கள் இணைந்து பூமியின் பல்லுயிர் மற்றும் உயிர்சூழல் குறித்து ஆய்வு நடத்தினர். இன்டர்கவர்மென்டல் சயின்ஸ்-பாலிசி பிளாட்பார் ஆன் பயோடைவர்சிட்டி மற்றும் ஈகோசிஸ்டம் சர்வீசஸ்(ஐபிபிஇஎஸ்)( Intergovernmental Science-Policy Platform on Biodiversity and Ecosystem Services (IPBES)) என்ற அமைப்பு இந்த ஆய்வு நடத்தி பாரிஸ் நகரில் நேற்று வெளியிட்டது. இந்த ஆய்வுக்கு பேராசிரியர் ஜோஷெப் சீத்தல் தலைமை தாங்கினார். இந்த ஆய்வில் அறிவியல் வல்லுநர்கள் கூறியிருப்பதாவது:
''பொருளாதார வளர்ச்சியால் ஏற்பட்ட மாசு, வாழுமிடங்களுக்காக காடுகளை அழித்தல், கரியமில வாயுக்களை வெளியிடுதல் போன்றவற்றின் விளைவுகளில் இருந்து மனிதர்கள் தங்களை காக்கவும் தவிர்க்கவும், பொருளாதார வளர்ச்சிக்கு பிந்தைய நிலையை நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.
மனிதர்களின் இரக்கமற்ற பொருளாதார வளர்ச்சி அசையால் பூமிப்பந்தில் ஏறக்குறைய 10 லட்சம் உயிரினங்கள் அழிவின் விழிம்பில் சிக்கி இருக்கின்றன. இதில் 8 லட்சம் தாவரங்கள், பூச்சிகள், விலங்குகள், அரியவகை சிறுஉயிரினங்கள் அடங்கும். இவை அனைத்தும் இன்னும் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் அழிவை எதிர்நோக்கி இருக்கின்றன.
தொழில்முறை சார்ந்த விவசாயம் மற்றும் மீன்பிடித்தல் போன்றவற்றால்தான் இந்த உயிரினங்கள் 10 முதல் நூறு மடங்கு அழிவை நோக்கிச் செல்லக் காரணம். நிலக்கரி, பெட்ரோலிய பொருட்களை எரித்தல் போன்றவற்றினால் ஏற்படும் மாசு ஆகியவற்றால் பருவநிலை மாற்றம் ஏற்பட்டு பெரிய இழப்பை ஏற்படுத்துகிறது.
8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகையிலான நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினங்கள், 400 வகையிலான சுறா மீன்கள், ஆயிரம் வகையிலான பவளப்பாறைகள், 120 வகையிலா கடல்வாழ் பாலூட்டிகள், காண்டா மிருகம், வங்கப்புலி, உரங்குட்டான் குரங்கு, குரங்கு வகைகள், அரியவகை மூலிகைகள், மருந்து தாவரங்கள், பூச்சியினங்கள் என 10 லட்சம் உயிரினங்கள் அழிவின் விழிம்பில் இருக்கின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த ஆய்வின் தலைவர் பேராசிரியர் ஜோஷப் சீத்தல் கூறுகையில், "மனிதர்களின் செயல்பாடுகளில் உலகச் சூழியலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இதுவரை கடந்த 3 ஆண்டுகளில் 15 ஆயிரம் ஆய்வுக் கட்டுரைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 50 ஆண்டுகளில் தொழில்புரட்சி, தொழில்மயமாதல், அதிவேக பொருளாதர வளர்ச்சியிலான பூமியின் சூழியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், இவை மனித சமூகத்தை எவ்வாறு பாதித்து, பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன என்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக உணவுப் பொருட்கள் உற்பத்திக்கு மகரந்தச் சேர்க்கை முக்கியமானது. அதற்கு பூச்சிகளின் பங்கு பிரதானம். ஆனால், மனிதர்களின் செயல்பாட்டால் பூச்சிகள் வரும் காலங்களில் காணாமல் போகும், மீன்களின் உற்பத்திக்கு மூலக் காரணமாக இருக்கும்பவளப்பாறைகள் அழியும், அதனால் மீன்கள் உற்பத்தியும் குறையும், மருத்துவத் தாவரங்களும் அழிவை எதிர்கொள்ளும்.
நீர், நிலத்தில் வாழும் 40 சதவீத உயிரினங்கள், 33 சதவீத பவளப்பாறைகள், மூன்றில் ஒருபங்கு நீர்வாழ் பாலூட்டிகள் அழிவை நோக்கியுள்ளன.
மனிதர்களின் செயல்பாட்டின் நேரடி விளைவுதான் இந்த இழப்புக்குக் காரணம். உலகின் அனைத்து பகுதிகளிலும் வாழும் மனித சமூகத்துக்கு விடுக்கப்பட்ட மிகப்பெரிய நேரடியாக மிரட்டலாகும்.
மனித சமுதாயம் இனிமேலாவது, சூழலை பாதுகாக்கவும், இருக்கின்ற நிலையை தக்க வைக்கவும், இயற்கையை நிலைத்தன்மையுடன் வைத்திருக்க அனைவரும் விருப்பு வெறுப்புகளை மறந்து செயல்பட வேண்டும்" என பேராசிரியர் ஜோஷப் சீத்தல் தெரிவித்தார்.