Last Updated : 09 May, 2019 04:15 PM

 

Published : 09 May 2019 04:15 PM
Last Updated : 09 May 2019 04:15 PM

லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே பண்ணை வீட்டில் 1000க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே பண்ணை வீடு ஒன்றிலிருந்து 1000க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸார் நேற்று பறிமுதல் செய்தனர்.

ஹோம்பி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஓர் உயர் ரக பண்ணை வீட்டில் 1000க்கும் மேற்பட்ட ஆபத்தான ஆயுதங்களை போலீஸார் நேற்று மாலை பறிமுதல் செய்தனர். அவர்களுடன் மதுபானம், புகையிலை, துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் ஆகியவற்றைக் கண்டுபிடிக்கும் நிபுணர் குழுவும் சென்றதாக லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை உயரதிகாரி ஜெஃப் லீ தெரிவித்தார்.

ஹோம்பி ஹில்ஸ் பகுதியில் உயர் ரக பண்ணை வீட்டின் முன் பகுதியில் கார்வந்து செல்லும் அகன்ற முற்றத்திலேயே 1000க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததையும் கைத்துப்பாக்கியிலிருந்து ரைபிள் வரை பல்வேறு வகையான ஆயுதங்கள் அங்கே இருந்ததையும் வான்வழி கேமராவில் பதிவாகியுள்ளதாக சிஎன்என் தெரிவிக்கிறது.

இதுகுறித்து ஆயுதங்களை ஆய்வு செய்யும் நிபுணர் குழு பீரோவின் செய்தித் தொடர்பாளர் ஜிஞ்சர் கோல்ப்புரூன் இதுகுறித்து தெரிவித்த விவரம்:

''லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அருகேயுள்ள ஹோம்பி ஹில்ஸ் பகுதியில் அருகே சட்டவிரோத துப்பாக்கிகள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக ஒரு தகவல் கிடைத்தது.

குறிப்பாக அங்குள்ள ஒரு சொகுசுப் பண்ணை வீட்டின் உரிமையாளரின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து  லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையொட்டி சந்தேகிக்கப்பட்ட நபரை விசாரிப்பதற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸாருடன் நாங்கள் விரைந்தோம்.

இவ்வீடு முழுவதும் நாங்கள் சோதனையிட்டோம். அப்போது அபாயகரமான நூற்றுக்கணக்கான ஆயுதங்களோடு, துப்பாக்கிகள் தயாரிக்கும் உபகரணங்கள் மற்றும் கருவிகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது''.

இவ்வாறு ஜிஞ்சர் கோல்ப்புரூன் தெரிவித்தார்.

போலீஸாரும் நிபுணர் குழு அதிகாரிகளும் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக, 2015-ல் நடைபெற்ற ஒரு தேடுதல் வேட்டையிலும் லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸார் 1200 துப்பாக்கிகளும் ஏழு டன் வெடிமருந்துகளையும் கைப்பற்றினர். அச்சமயம் பணமாக 2,30,000 அமெரிக்க டாலரும் பறிமுதல் செய்யப்பட்டது. 2015-ல் நடைபெற்ற இச்சம்பவத்தில் அவ்வீட்டின் உரிமையாளர் ஒரு வாகனத்தின் வெளியே இறந்து கிடந்தது இயற்கையான மரணம் என்று கூறப்பட்டதையொட்டி விசாரணை மேற்கொள்ள வீட்டுக்குள் சென்றபோது இவை கண்டுபிடிக்கப்பட்டதாக லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x