

வைரவியாபாரி நிரவ் மோடிக்கு சிறைத்தண்டனையை ஜூ 27ம் தேதி வரை நீட்டித்து பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி நிதிமுறைகேடு தொடர்பாக 2 பில்லியன் டாலர்கள் மோசடி வழக்கில் சிக்கியுள்ள நிரவ் மோடி இந்தியாவுக்கு நாடுகடத்தப்படும் வழக்கை எதிர்கொண்டு வருகிறார்.
இவரது 3வது ஜாமீன் முயற்சியும் தோல்வியில் முடிய 48 வயது நிரவ் மோடி வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நிரவ் மோடிக்கு எதிரான முதல் வழக்கு தொடர்பாக தலைமை மேஜிஸ்ட்ரேட் ஆர்புட்நாட் முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். ஜூன் 27ம் தேதி வரை நிரவ் மோடி சிறையில் இருக்குமாறு அவர் உத்தரவிட்டார்.
நிரவ் மோடி இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டால் அவர் எந்த சிறையில் அடைக்கப்படுவார் என்ற விவரத்தை 14 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு நீதிபதி இந்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
செண்ட்ரல் லண்டன் மெட்ரோ வங்கி கிளை வாரண்ட் மூலம் இவர் ஸ்காட்லாந்து யார்டின் சீருடை அணிந்த போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அதாவது மார்ச் 19ம் தேதி இவர் புதிய வங்கிக் கணக்கைத் தொடங்க முயன்ற போது கைது செய்யப்பட்டார்.
டிசம்பர் 2018-ல் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவைப் பிறப்பித்தவர் நீதிபதி ஆர்புட்நாட் என்பது குறிப்பிடத்தக்கது.