Published : 09 May 2019 04:45 PM
Last Updated : 09 May 2019 04:45 PM

‘‘சீக்கியப் படுகொலையின்போது ராஜீவ் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்தது’’- பாஜக அதிரடி குற்றச்சாட்டு

சீக்கியர்களுக்கு எதிராக 1984-ம் ஆண்டு கலவரம் நடந்தபோது அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியின் அலுவலகத்தில் இருந்து உத்தரவுகள் வந்ததாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை, போபர்ஸ் ஊழலில் ஊழல்வாதி நம்பர் ஒன்று என்று பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தின் போது காட்டமாக விமர்சித்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்களும் கடுமையாக கண்டித்தனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், " போர் முடிந்துவிட்டது, கர்மா காத்திருக்கிறது. என் தந்தையின் பெயரைச் சொல்லி பிரச்சாரம் செய்தாலும் அவர் உங்களைக் காப்பாற்றப்போவதில்லை" என்று ட்வீட் செய்திருந்தார்.

இதற்கு பதிலடியாக, பிரதமர் மோடி ‘‘நான் வாரிசு அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் குறித்து ஊழல்வாதி நம்பர் ஒன் என்று பேசினேன். நான் இந்த வார்த்தையை  பேசியதும், சிலருக்கு கடுமையான வயிற்றுவலி வந்து, ஓ என்று அழத் தொடங்கிவிட்டார்கள். இன்னும் அவர்கள் அழுவார்கள்.

காங்கிரஸ் கட்சியால் போபர்ஸ் ஊழல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க தயாரா’’ என கேள்வி எழுப்பி இருந்தார். இதைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி தொடர்பாக பாஜக தலைவர்கள் பிரச்சாரக்க கூட்டங்களில் பேசி வருகின்றனர். அவர்களுக்கு காங்கிரஸூம் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்தநிலையில், பாஜகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ராஜீவ் காந்தி பற்றி கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் என்பது ஒரு அரசே, தனது சொந்த மக்களுக்கு எதிராக நடத்திய இனப்படுகொலை என நானாவதி கமிஷன் குறிப்பிட்டுள்ளது. பிரதமர் ராஜீவ் காந்தியின் அலுவலகத்தில் இருந்து வந்த உத்தரவுபடி இந்த படுகொலை நடந்ததாக குறிப்பிட்டுள்ளது. இந்த மோசமான செயலுக்கு நீதி வேண்டி நாடு காத்திருக்கிறது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x