முஸ்லிம்கள் மீதான தாக்குதலின் பின்னணியில் அதிதீவிர புத்த குழுக்கள்: இலங்கை

முஸ்லிம்கள் மீதான தாக்குதலின் பின்னணியில் அதிதீவிர புத்த குழுக்கள்: இலங்கை
Updated on
1 min read

இலங்கையில் இஸ்லாமியர்களின் மீதான தாக்குதலின் பின்னணியில் அதிதீவிர புத்த மதத்தைச் சேர்ந்த குழுக்கள் இருப்பதாக அந்நாடு குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து இலங்கை அதிகாரிகள் தரப்பில், ''கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் வடகிழக்குப் பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் தொடங்கின. அவர்களது தொழிற்சாலைகள், மசூதிகள் ஆகியவற்றில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இந்தத் தாக்குதலின் பின்னணியில் அதிதீவிர நோக்கம் கொண்ட புத்த மதத்தைச் சேர்ந்த குழுக்கள் உள்ளன.இக்குழுக்கள் கடந்த ஆண்டு கண்டி மாகாணத்தில் இம்மாதிரியான கலவரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்தக் கலவரம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 10க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டது.

இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள 3 தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் கடந்த மாதம் 21-ம் தேதியன்று (ஈஸ்டர் பண்டிகை) தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. இந்த பயங்கரத் தாக்குதலில் 258 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு  ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டது.

இந்நிலையில், இத்தாக்குதலுக்குப் பதிலடியாக முஸ்லிம்கள் மீது சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்கள் சில தினங்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தினர். இது, முஸ்லிம்களுக்கு எதிரான கலவரமாக மாறியது. இதில் பலர் படுகாயமடைந்தனர். முஸ்லிம் மக்களின் வீடுகள், அவர்கள் நடத்தி வந்த கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை தீக்கிரையாக்கப்பட்டன.

இதையடுத்து, கலவரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை முழுவதும் கடந்த திங்கள்கிழமை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு பின்னர் விலக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in