

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள நரேந்திர மோடிக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி, அமித் ஷா தலைமையில் மக்களவைத் தேர்தலைச் சந்தித்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றியை நோக்கி நகர்ந்து மீண்டும் 2-வது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடிக்கிறது.
290க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்று வருவதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 51 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நரேந்திர மோடிக்கு உலகத் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய அதிபர் புதின்
நாடாளுமன்றத் தேர்தலில் வலிமையான வெற்றியைப் பெற்ற பாஜகவுக்கு வாழ்த்துகள்.
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி
இந்தியப் பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களுக்கு வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய மற்றும் ஆப்கானிஸ்தானின் நட்புறவு எப்போதும்போல உறுதியாக இருக்கும்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு இதயப்பூர்வ வாழ்த்துகள்.
மேலும், ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே தொலைபேசியில் தொடர்புகொண்டு மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.