Published : 24 Apr 2019 02:10 PM
Last Updated : 24 Apr 2019 02:10 PM

வசதியானவர்கள், நன்கு படித்தவர்கள்: தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியவர்கள் பற்றி இலங்கை தகவல்

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்த்திய தற்கொலைப் படை தீவிரவாதிகள் யு.கே., ஆஸ்திரேலியாவில் படித்த பட்டதாரிகள். அவர்கள் நன்கு வசதியானவர்கள் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இலங்கை ராணுவ அமைச்சர் ருவான் விஜேவர்தனே கூறும்போது, ''தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் சிலர் யு.கே.விலும், ஆஸ்திரேலியாவிலும் பட்டப்படிப்பை படித்துள்ளனர். அதன் பின்னர் அவர்கள் இலங்கையில் குடிபெயர்ந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர வர்க்கத்துக்கு மேல் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் அவர்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரமானவர்களாக இருந்தனர். அவர்களது குடும்பமும் வசதியானதாகவே இருந்தது. தற்கொலைப் படை தாக்குதலை நடத்தியவர்களில் பெரும்பாலானவர்கள் சட்டப் படிப்பை முடித்தவர்கள். நன்கு படித்தவர்கள். இதுதான் இங்கு கவலை அளிக்கக் கூடிய செய்தியாக இருக்கிறது'' என்றார்.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை கொழும்பு நகரில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் தேவாலயக் கட்டிடத்தின் சில பகுதிகள் வெடித்துச் சிதறின.

இந்தக் குண்டுவெடிப்பு நடந்த சற்று நேரத்தில் கொழும்பு நகரில் உள்ள முக்கிய நட்சத்திர ஓட்டல்களைக் குறிவைத்து நடந்தன. தொடர்ந்து 8 இடங்களில் தற்கொலைப் படை தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தினர்.

இந்தக் குண்டுவெடிப்பு சம்பவங்களில் இதுவரை 359 பேர் பலியாகி உள்ளனர். 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம்  பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x