

இலங்கையில் நேற்று அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புகளில் 215 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், கொழும்பு விமான நிலையத்தில் இன்று வெடிக்காத நிலையில் பைப் வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் நேற்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டனர். அந்போது, பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன.
கொழும்பு நகரில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் பிராத்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதில் தேவாலய கட்டத்தின் சில பகுதிகள் வெடித்து சிதறின.
அங்கிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். எங்கும் ரத்த வெள்ளமாக காணப்பட்டது. காயமடைந்த அனைவரும் உடனடியாக மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த குண்டுவெடிப்பு நடந்த சற்று நேரத்தில் கொழும்பு நகரில் உள்ள முக்கிய நட்சத்திர ஓட்டல்களை குறி வைத்து குண்டுவெடிப்புகள் நடந்தன.
இதனைத் தொடர்ந்து நீர்கொழும்புவில் பகுதியில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலயத்திலும் குண்டுவெடித்தது. பின்னர் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மட்டக்களப்பு நகரில் உள்ள சியான் தேவாலயத்திலும் பயங்கர தாக்குதல் நடந்தது. மொத்தம் 8 இடங்களில் நடந்த தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளது. 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலை தொடர்ந்து, இலங்கையில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரில் உள்ள பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
கலவர தடுப்பு போலீசார், சிறப்பு அதிரடிப்படை போலீசார் உள்பட ஏராளமான போலீசார் விமான நிலையத்தை சுற்றிலும் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கொழும்பு விமான நிலையத்தில் பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டை கைப்பற்றிய விமானப்படை அதிகாரிகள் செயலிழக்க வைத்தனர்.
இந்த குண்டுவெடித்து இருந்தால் கொழும்பு விமான நிலையம் தகர்க்கப்பட்டு இருக்கும் எனவும், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை போலீஸார் தெரிவித்துள்ளனர்.