

நியுசிலாந்து கிறிஸ்ட்சர்ச்சில் மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாகவே ஈஸ்டர் தினத்தில் கிறிஸ்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ருவன் விஜேவர்த்தனே பேசும்போது , இலங்கையில் தேவலாயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் மீது ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் நியூசிலாந்து கிறிஸ்ட் சர்ச்சில் மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாகவே உள் நாட்டு இஸ்லாம் இயக்கத்தால் நடத்தப்பட்டுள்ளது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இலங்கையில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் இந்தத் தாக்குதலை எதிர்த்துள்ளன. இதில் சில முஸ்லிம் இயக்கங்களே ஈடுபட்டுள்ளன.
தோஃபிக் ஜமாத் அமைப்புதான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. சுமார் 7 தற்கொலைப் படை தீவிர்வாதிகள் 3 தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஓட்டலை குறிவைத்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இலங்கை அரசு நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிவிட்டதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் ராஜபக்சே குற்றச்சாட்டியுள்ளார்.
இந்த தாக்குதல் குறித்து ராஜபக்சே கூறும்போது, “ நான் அரசாங்கத்தை ஒப்படைக்கும்போது அது தீவிரவாதம் இல்லா நாடாக இருந்தது. என்னுடைய அரசின் கீழ் இம்மாதிரியான தாக்குதல் நடந்திருக்காது. பொது மக்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க முடியவில்லை என்றால் இந்த அர்அசு நிச்சயம் பதவி விலக வேண்டும் “ என்றார்.
நியூஸிலாந்தில் மார்ச் மாதம் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள அல்நூர் மசூதி மற்றும் லின்வுடன் பகுதியில் உள்ள மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமையன்று முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.