

இஸ்ரேலின் பிரதமராக ஐந்தாவது முறையாக பதவி ஏற்க உள்ளார் பெஞ்சமின் நெதன்யாகு.
இஸ்ரேலில் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இத்தேர்தலில் முன்னாள் ராணுவத் தலைவரான பென்னி கண்ட்ஸின் புளூ மற்றும் வெள்ளைக் கூட்டணி மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு லிகுட் கட்சி இடையே கடுமையான போட்டி நிலவியது.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும் நெதன்யாகுவின் கட்சிக்கு வலது சாரிகளும், மதம் சார்ந்த பின்னணி கொண்ட கட்சிகளும் ஆதரவு அளித்தன.
இதில் மொத்தமுள்ள 120 இடங்களில், 65 இடங்களில் நெதன்யாகுவின் லுகுட் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகள் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளன.
இதன் மூலம் 5-வது முறையாக இஸ்ரேலின் பிரதமராக பதவியேற்க உள்ளார் பெஞ்சமின் நெதன்யாகு. மேலும் இஸ்ரேலின் நீண்ட கால பிரதமர் என்ற சாதனையும் படைத்திருக்கிறார்.
தேர்தலில் வெற்றி பெற்றது குறித்து நெதன்யாகு கூறும்போது, ''இது வலதுசாரிகளின் அரசுதான். ஆனால் நான்தான் பிரதமராக இருக்கப் போகிறேன். நான் அனைத்து மத மக்களின் பிரதமராக இருப்பேன்'' என்று தெரிவித்தார்.