Published : 12 Apr 2019 06:17 PM
Last Updated : 12 Apr 2019 06:17 PM

தெற்கு சூடான் தலைவர்களின் காலில் விழுந்த போப் பிரான்சிஸ்: உள்நாட்டுப் போரைத் தடுக்குமாறு வேண்டுகோள்

தெற்கு சூடான் தலைவர்களின் காலில் விழுந்து முத்தமிட்ட போப் பிரான்சிஸ் உள்நாட்டுப் போரைத் தடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

ஒவ்வொரு புனித வியாழன் அன்றும் வாடிகனில் போப் ஆண்டவர், கைதிகளுடன் தூய்மைச் சடங்கை (கால்களைக் கழுவுதல்) நடத்துவது வழக்கம். ஆனால் ஆப்பிரிக்கத் தலைவர்களின் காலில் விழுந்து உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுமாறு கூறியது இதுவே முதல் முறையாகும்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போப், தெற்கு சூடான் தலைவர்களைச் சந்தித்தார். அப்போது தெற்கு சூடான் அதிபர் சல்வா கிர், எதிர்க்கட்சித் தலைவர் ரியக் மச்சார் மற்றும் 3 துணை அதிபர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது அனைவரின் காலில் விழுந்து, முத்தமிட்ட போப், உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருமாறு வேண்டினார். போப்பின் இந்த எதிர்பாராத செயலால் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

தெற்கு சூடானின் துணை அதிபர்களில் ஒருவரான ரெபேக்கா கரங் கூறும்போது, ''இதுபோன்ற நிகழ்வை நான் பார்த்ததில்லை. அப்போது என் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது'' என்றார்.

தெற்கு சூடானில் என்ன பிரச்சினை?

உலகின் புதிய நாடான தெற்கு சூடான். ஆறு நாடுகளை எல்லையாகக் கொண்டது. உலகின் மிகவும் வளர்ச்சியடையாத நாடுகளில் ஒன்று. 2011-ல் சூடானிலிருந்து பிரிந்தது இந்த நாடு.

தெற்கு சூடான் கலவரங்களால் சூழப்பட்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் அரசுக்கு எதிராக போராட்டங்கள். நியாயமான காரணங்கள், நியாயமற்ற காரணங்கள் ஆகிய இரண்டுக்காகவும் புரட்சி வெடித்துக் கொண்டிருக்கின்றன. பல உள்ளூர்வாசிகள் இந்தப் புரட்சி இயக்கங்களில் சேர்ந்து கொள்கிறார்கள்.

தெற்கு சூடானில் விவசாயிகள் போராளிகள் ஆகிறார்கள். இதனால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. போராளிகள் ஆகாத விவசாயிகளும், கலவரங்கள் காரணமாக விவசாயம் செய்ய முன்வருவதில்லை. இதனால் உணவுப் பஞ்சம் பரவுகிறது.

போராட்டக் குழுக்கள் மீது அரசு தாக்குதல் நடத்துகிறது. எனவே போராளிகள் தலைமறைவு வாழ்க்கை நடத்துகிறார்கள். இவர்களால் பணிக்குச் சென்று ஊதியம் பெற முடியாத சூழல். காடுகளில் தலைமறைவாக இருக்கிறார்கள். இதனால் அப்பாவி மக்கள் உணவின்றி வாடுகிறார்கள்.

தின்கா, நூயெர் ஆகிய இரு இனத்தவர்களுக்குள் பகைமை உணர்வு மேலோங்கி நிற்கிறது. இதனால் தேசமே இன அடிப்படையில் பிரிந்து கிடக்கிறது. ராணுவமேகூட இந்த இனங்களின் அடிப்படையில் பிளவுபட்டுக் கிடப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x