

சோமாலியாவில் தீவிரவாதக் குழு தலைவர் கொல்லப்பட்டிருப் பதைத் தொடர்ந்து அந்நாடு முழுவதும் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல் காய்தா தீவிரவாதக் குழுவுடன் தொடர்பில் உள்ள அல் ஷெபாப் எனும் தீவிரவாதக் குழு செயல்பட்டு வந்தது. மேற்கத்திய நாடுகளின் ஆதரவோடு இயங்கி வரும் சோமாலிய அரசைக் கவிழ்க்க இந்தக் குழு முயன்று வந்தது.
இந்நிலையில், இந்த வார ஆரம்பத்தில் அக்குழுவின் தலைவர் அகமது அப்தி கோடேன் அமெரிக்கப் பாதுகாப்புப் படைகள் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலின்போது கொல்லப்பட்டார்.
37 வயதான கோடேன், ஆப்கானிஸ்தானில் தலிபான் களிடத்தில் பயிற்சி பெற்றவராவார். 2010ல் உகாண்டா நாட்டின் தலைநகரமான கம்பாலா மற்றும் 2013ல் கென்ய நாட்டின் தலைநகரமான வெஸ்ட்கேட் மால் ஆகிய இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு கோடேனின் அமைப்புதான் பொறுப்பேற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கோடேன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சோமாலியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் இதர அரசு அலுவலகங்கள் மீது அல் ஷெபாப் இயக்கத்தினர் தாக்குதல் நடத்தலாம் என்று அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சரான கலிப் அகமது எரெக் தெரிவித்துள்ளார்.அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.