

ஏமனில் உள்நாட்டுப் போரில் அமெரிக்க ராணுவத்தினர் பங்களிப்பை நிறுத்துவதற்காக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்த தீர்மானத்தை ட்ரம்ப் நிராகரித்தார்.
இதுகுறித்து ட்ரம்ப் கூறும்போது, ''இத்தீர்மானம் நமது அரசியலமைப்பைச் சேர்ந்த அதிகாரிகளை பலவீனப்படுத்துவதற்கான தேவையற்ற மற்றும் ஆபத்தான முயற்சியாகும். மேலும் இது அமெரிக்க குடிமக்கள் மற்றும் நாட்டுக்காக சேவை புரிபவர்களைப் பாதிக்கும்'' என்றார்.
ஏமன் அரசுடன் இணைந்து சவுதி நடத்தும் தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை முன்னரே கண்டித்தது. ஏமனிலிருந்து அமெரிக்கா தனது படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இதனைத் தொடர்ந்தே அமெரிக்க நாடாளுமன்ற அவையில் குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏமனில் போரை நிறுத்த வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தனர்.
நாங்கள் உலகின் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளவர்களுக்கு உதவியுள்ளோம். ஏமன் போரில் அமெரிக்கப் படைகள் பங்கேற்று இருப்பது அவமானகரமானதுதான். இராக், சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகளை வெளியே கொண்டுவர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆர்வமாக இருக்கிறார். ஆனால் ஏமனிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறுவது குறித்து அவர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னரே தெரிவித்தனர்.
இந்நிலையில் ட்ரம்ப்பின் இந்த முடிவு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை கோபமடையச் செய்துள்ளது.
தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூருக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.
ஏமன் போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் குழந்தைகளும் அடக்கம்.