Last Updated : 02 Apr, 2019 01:59 PM

 

Published : 02 Apr 2019 01:59 PM
Last Updated : 02 Apr 2019 01:59 PM

சீனாவில் 23 குழந்தைகளுக்கு விஷ உணவு கொடுத்ததாக ஆசிரியை கைது

குழந்தைகளுக்கு கிண்டர்கார்டன் ஆசிரியை ஒருவர் நைட்ரேட் விஷம் கலந்த உணவைக் கொடுத்த சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. அனைத்துக் குழந்தைகளுக்கும் திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதை அடுத்து ஆசிரியை கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து சின்குவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ள விவரம்:

''இந்தச் சம்பவம் சீனாவில் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஜியாவோசூவோ நகரில் மார்ச் 27 அன்று நடந்தது. சம்பவத்தன்று மெங்மெங் மழலையர் பள்ளியில் உணவு வேலைக்குப் பிறகு குழந்தைகள் அனைவரும் ஒரே நேரத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

குழந்தைகள் அனைவருக்கும் அளிக்கப்பட்ட உணவில் நைட்ரேட் ரசாயனப் பொருள் கலக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் மற்றும் மீன் தயாரிப்பு உணவுகள் கெடாமல் இருப்பதற்காக சோடியம் நைட்ரேட் பயன்படுத்தப்படும். ஆனால் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் அதிக அளவில் நச்சுத்தன்மையை தரக்கூடிய குணம் மிக்கதாக சோடியம் நைட்ரேட் உள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து பள்ளியில் விசாரிக்கையில், பள்ளி ஆசிரியை குழந்தைகளுக்கு மதிய உணவாக கஞ்சி அளித்ததும் அவர் உணவில் நைட்ரேட் கலந்துகொடுத்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஆசிரியை கைது செய்யப்பட்டார்.

இதில் உடனடியாக 15 குழந்தைகள் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாகவும் 7 குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் ஒரு குழந்தைக்கு மட்டும் தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வளாகம் தெரிவித்துள்ளது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியையிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x