

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே நடந்த பயங்கர மோதலில் பாதுகாப்புப் படையினர் தரப்பில் பலர் பலியாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிகின்றன.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ ஆப்கானின் மேற்கு பகுதி மாகாணமான பத்கிஸ் மாகாணத்தில் தலிபான்கள் அந்நாட்டு பாதுகாப்பு படையினருக்கு எதிராக நடந்த பயங்கர தாக்குதலில் ஆப்கன் படையில் பலர் பலியாகி உள்ளனர். பாலா முர்கஃப் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக பலத்த சண்டை நடந்து வருகிறது” என்று கூறியுள்ளனர்.
இந்த நிலையில் இந்தத் தாக்குதலில் தலிபான்கள் 30 பேர் பலியானதாக ஆப்கன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கக் கூட்டுப் படையும் அங்கு முகாமிட்டுள்ளது.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி தலைநகர் காபூலில் வெடிகுண்டுகள் நிரப்பிய ஆம்புலன்ஸை வெடிக்கச் செய்ததில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அண்மைக்காலமாக பாதுகாப்பு படையினருக்கு எதிராக தலிபான்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றனர்.
கடந்த மூன்று வருடங்களில் தலிபான்களின் ஆதிக்கம் ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.