பேருந்தில் இருந்து கீழே இறக்கி 14 பேர் சுட்டுக்கொலை: பாகிஸ்தானில் தீவிரவாதிகள் அட்டூழியம்

பேருந்தில் இருந்து கீழே இறக்கி 14 பேர் சுட்டுக்கொலை: பாகிஸ்தானில் தீவிரவாதிகள் அட்டூழியம்
Updated on
1 min read

துணை ராணுவப்படைக்கான சீருடையை அணிந்திருந்த அடையாளம்தெரியாத துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள், நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்தை வழிமறித்து அதில் பயணம் செய்துகொண்டிருந்த 14 பேரை கீழே இறக்கி சுட்டுக்கொன்ற அதிர்ச்சி சம்பவம் பாகிஸ்தானில் இன்று நடந்துள்ளது.

பலுசிஸ்தான் மாகாணத்தில் ஆர்மாரா பகுதியில் உள்ள மாக்ரான் கோஸ்டல் நெடுஞ்சாலையில் கராச்சிக்கும், குவெட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது.

 அவ்வழியே சென்றுகொண்டிருந்த ஐந்து அல்லது ஆறு பேருந்துகளை கிட்டத்தட்ட 15 லிருந்து 20 பேர் வரை அடங்கிய துப்பாக்கிய ஏந்திய நபர்கள் வழிமறித்து நிறுத்தியுள்ளனர்.

பேருந்துகளை நிறுத்தி வலுக்கட்டாயமாக பயணிகளை கீழே இறக்கி உள்ளனர். அவர்களின் அடையாள அட்டைகளை வாங்கிப் பார்த்த பிறகு ஒவ்வொருவரையும் சுட்டுக்கொன்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பலுசிஸ்தான் காவல்துறை தலைவர் மோசின் ஹசன் பட் கூறுகையில்,அடையாளந் தெரியாத 15 லிருந்து 20 பேர் அடங்கிய துப்பாக்கிய ஏந்திய துணை ராணுவப்படை உடை அணிந்த தீவிரவாதிகள் 16 பேரை பேருந்தில் இருந்து கீழே இறக்கியது. இதில் 2 பேர் தப்பித்து ஓடிவிட்டனர். மீதியுள்ள 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இவ்வாறு மாகாண காவல்துறை தலைவர் தெரிவித்தார்.

பலூசிஸ்தான் உள்துறை அமைச்சர் ஜியா லங்காவ் ஊடகங்களுக்கு பேட்டியளித்தபோது, ''தாக்குதல் நடத்தியவர்கள், பயணிகள் மீது வழக்கமான சோதனைகளை மேற்கொள்வதற்காக ஒரு மாறுவேடமாக தங்கள் இச்சீருடைகளைப் பயன்படுத்தியுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களை அடையாளங்காணவும் கைதுசெய்யவும் விசாரணை நடத்திவருகிறோம். ஆனால் இன்னும் யாரும் அடையாளங் காணப்படவில்லை'' என்றார்.

பலூசிஸ்தான் முதல்வர் கண்டனம்

பலூசிஸ்தான் முதல்வர் ஜாம் கமால் இத்துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

 அதில்  '' பயங்கரவாதிகளின் கோழைத்தனத்தையும் காட்டுமிராண்டித்தனத்தையும் இது காட்டுகிறது. நாட்டின் பெயரை கெடுக்கவும் பலூசிஸ்தான் முன்னேற்றத்தைத் தடுக்கவும் இச்சதிச் செயல் நடந்துள்ளது. எனினும் பலூசிஸ்தான் மாகாணம் முன்னேற்றத்தை நோக்கி செல்லும். அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்'' இவ்வாறு அவர் தனது கண்டனத்தில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in