Last Updated : 02 Apr, 2019 10:10 AM

 

Published : 02 Apr 2019 10:10 AM
Last Updated : 02 Apr 2019 10:10 AM

இந்தியா தகர்த்த செயற்கைக்கோள் 400 துண்டுகளாக சிதறல்: சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து: நாசா கவலை

ஏ-சாட் ஏவுகணை மூலம் விண்வெளியில் செயற்கைக்கோள் ஒன்றை தகர்த்த இந்தியாவின் செயலால் 400 துண்டுகளாக அந்த செயற்கைக்கோள் சிதறிக் கிடக்கிறது, இதனால் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ஐஎஸ்எஸ்) ஆபத்து அதிகரித்துள்ளது என்று நாசா கவலை தெரிவித்துள்ளது.

மிஷன் சக்தி திட்டம்

இந்திய செயற்கைக்கோள்களை பாதுகாக்கும் வகையில், மற்ற எதிரிநாட்டு செயற்கைக் கோள்களை தாக்கி அழிக்கும் ஏ-சாட் ஏவுகணைச் சோதனையை கடந்த மாதம் 27-ம் தேதி மத்திய பாதுகாப்புதுறையின் டிஆர்டிஓ நடத்தியது. இந்த திட்டத்துக்கு மிஷன் சக்தி திட்டம் என பெயரிடப்பட்டு இருந்தது.

இந்த மிஷன் சக்தி வெற்றியடைந்ததைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு சமூக ஊடங்கள், தொலைக்காட்சி, வானொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு அடுத்தாற்போல், இந்தியாவிடம் செயற்கைக்கோள் பாதுகாப்பு ஏவுகணை இருக்கிறது என்றும் சோதனையின் போது, ஒரு செயற்கைக்கோளை 3 நிமிடங்களில்  துல்லியமாக ஏவுகணை தாக்கி அழித்தது என்று மோடி பெருமையாகக் குறிப்பிட்டார்.

400 பாகங்கள்

இந்நிலையில், தகர்த்து எறியப்பட்ட செயற்கைக்கோளின் பாகங்கள் 400-க்கும் மேற்பட்டவை விண்வெளியின் புவிசுற்றுவட்டப் பாதையில் மிதப்பதாக ஏற்கனவே அமெரிக்கா கூறி இருந்தது. இந்நிலையில், அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம், ''இந்தியா தகர்த்த செயற்கைக்கோளின் பாகங்கள் 400 துண்டுகளாக சிதறிக்கிடக்கின்றன. இவற்றால் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாசா விண்வெளிமையத்தின் நிர்வாகி ஜிம் பிரிடன்ஸ்டைன் இன்று நாசா ஊழியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர்  கூறியதாவது:

''விண்வெளியில் தங்களின் செயற்கைக்கோளை பாதுகாப்பதற்காக, இந்தியா ஏ-சாட் எனும் ஏவுகணையை ஏவி செயற்கைக்கோளை தாக்கி அழித்து நடத்திய சோதனை உண்மையில் பயங்கரமானது. ஏவுகணை அழித்த செயற்கைக்கோளின் உடைந்த 400 பாகங்கள் விண்வெளியில் குப்பைகளாகச் சிதறிக்கிடக்கின்றன. இதுவரை 60 பாகங்களைக் கண்டுபிடித்துள்ளோம். 24 பெரிய பாகங்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்கு மேலே பறந்துகொண்டிருக்கிறது.

இதுபோன்ற செயல்கள், மனிதர்கள் விண்வெளியில் எதிர்காலத்தில் பயணிப்பதற்கு உகந்ததாக இருக்காது.. விண்வெளியில் மிதக்கும் பாகங்களில் பெரும்பாலானவை 10 சென்டிமீட்டருக்கும் அதிகமாக, பெரியளவில் இருக்கிறது. இந்த பாகங்களால் சர்வதேச விண்வெளிய நிலையத்துக்கு ஆபத்தான சூழல் இருக்கிறது.

இந்தியாவின் ஏ-சாட் ஏவுகணைச் சோதனை நடவடிக்கைகள், மற்ற நாடுகளின் விண்வெளி ஆய்வுகளுக்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தும். இதுபோன்ற செயல்கள் நடக்கும்போது, விண்வெளியில் இருக்கும் மற்ற செயற்கைக்கோள்களுக்கும் இடையூறுகளை ஏற்படுத்தும்.

ஒருநாடு இதுபோன்று சோதனை செய்யும் போது, மற்ற நாடுகளும் நாங்களும் இதுபோன்ற சோதனையைச் செய்கிறோம் என்று இறங்கினால், விண்வெளி என்ன ஆவது? இதை ஏற்க முடியாது. எங்களுக்கு என்ன மாதிரியான பாதிப்புவரும் என்பது குறித்து நாசா தெளிவாக இருக்கிறது.

விண்வெளியில் மிதந்து வரும் செயற்கைக்கோள் குப்பைகள் குறித்து ஒவ்வொரு மணிநேரமும் நாசா தகவல்களைச் சேகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் இருந்து நாங்கள் செய்த ஆய்வின்படி,  இந்த உடைந்த பாகங்கள் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து கடந்த வாரத்தில் இருந்து 44 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், பூமியின் குறைந்த சுற்றுவட்டாரப் பாதையில் இருப்பவை அடுத்த 10 நாட்களுக்குள் சிதைந்துவிடலாம்.

கடந்த 2007-ம் ஆண்டு இதோபோன்ற சோதனையை சீனா மேற்கொண்டது. சீனா தகர்த்த செயற்கைக்கோளின் பாகங்கள் இன்னும் விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கிறது. விண்வெளியில் இத்தகைய செயல்களுக்கு இதுபோன்ற  சோதனை மேற்கொள்ளும் நாடுகள்தான் பொறுப்பு.

விண்வெளியில் உள்ள சூழல் குறித்து அறிந்து, நாடுகள் பொறுப்புடனும், விண்வெளி போக்குவரத்து மேலாண்மை குறித்தும் அறிந்து நடக்க வேண்டும். விண்வெளி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்''.

இவ்வாறு பிரிடென்ஸ்டைன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x