

கிழக்கு உக்ரைன் பகுதியில் போர் நிறுத்தம் மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் - உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோஷென்கோ இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கடந்த ஏப்ரல் முதல் அரசுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர். கிளர்ச்சியாளர்களுக்கு உதவும் ரஷ்யாவுக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகளும் அமெரிக்காவும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ரஷ்யாவுக்கு எதிராக இந்நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. என்றாலும் ரஷ்யா தன் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வருகிறது.
ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளன. ரஷ்யாவை ஒட்டிய உக்ரைன் பகுதியில் தனது வீரர்களை அனுப்ப நேட்டோ முடிவெடுத்தது. ஆயிரக்கணக்கான வீரர்களை கொண்ட நேட்டோ படை திரட்டப்பட்டு, சில நாட்களில் உக்ரைனுக்கு அனுப்பப்படும் என்று நேட்டோ தரப்பில் தெரி விக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை, நேட்டோ நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேச அமெரிக்க அதிபர் ஒபாமா திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், ரஷ்யா - உக்ரைன் தலைவர்கள் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் தரப்பிலிருந்து இந்தத் தகவல் வெளிவந்தாலும் இந்தச் செய்தியை ரஷ்யத் தரப்பு உறுதிப்படுத்தவில்லை. ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களும் இது தொடர்பாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
கிழக்கு உக்ரைனில் நடந்த சண்டையில் இதுவரை 2,600 பேர் கொல்லப்பட்டுள்ளனர், என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.