

இலங்கையில் கடந்த ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த குண்டுவெடிப்பில் 250-க்கும் மேற்பட்ட அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த கோரப் படுகொலைச் சம்பவம் இலங்கையை மட்டுமின்றி, உலகையே உலுக்கியுள்ளது. இலங்கையில் இருக்கும் சில முஸ்லிம் தீவிரவாதிகளின் வேலை என இதை அலட்சியமாக நினைத்தால் அது மிகப் பெரிய தவறு. இப்படிப்பட்ட திட்டமிட்ட நாசகர வேலையை, ஏற்கெனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் தீவிரவாத குழுக்களின் உதவி இல்லாமல் செய்து முடித்திருக்க முடியாது. சம்பவம் நடந்த 2 நாட்களுக்குப் பிறகு இராக் மற்றும் சிரியாவில் செயல்பட்டு வரும் ஐஎஸ் தீவிரவாதிகள் இந்தப் படுகொலைகளுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டனர். கடந்த மார்ச் மாதம் நியூஸிலாந்தில் உள்ள கிறைஸ்ட்சர்ச் மசூதியில் நடந்த தாக்குதலுக்கு பழி வாங்கும் நடவடிக்கை எனக் கூறியுள்ளனர்.
இதுபோன்ற தாக்குதல் நடக்க வாய்ப்பு இருக்கிறது என வெளிநாட்டு உளவு அமைப்புகள் எச்சரிக்கை செய்ததை அலட்சியப்படுத்தியதால், இலங்கை அரசு இப்போது அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது. தாக்குதல் நடப்பதற்கு சில மணி நேரம் முன்புகூட இந்திய உளவு அமைப்புகள் இலங்கையை எச்சரித்தது. இந்த எச்சரிக்கை அலட்சியப்படுத்தப்பட்டதா அல்லது அது மறைக்கப்பட்டதா என்பதை இலங்கை கண்டுபிடிக்க வேண்டும். 12 இந்தியர்கள் உள்பட 40 வெளிநாட்டினர் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். இலங்கையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே முடிவுக்கு வந்த இனப்படுகொலையின் நீட்சியாகக் கூட இந்தத் தாக்குதல்கள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக சிங்கள தீவிரவாதிகளுக்கும் முஸ்லிம் இனத்தவருக்கும் இடையே அவ்வப்போது நடந்து வந்த சண்டைகளால் இலங்கையில் உள்ள தீவிரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத் ஆத்திரத்தில் இருந்துவந்தது. அதற்கு இப்போது பழிதீர்த்துள்ளது. ஆனால், இதுபோன்ற தாக்குதல்
களை நடத்துவதற்கு வெளிநாடுகளில் இருந்து உதவியைப் பெற்றுள்ளது. அதனால்தான் தாக்குதல்களுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பொதுவாக இதுபோன்ற தாக்குதல்கள் நடக்கும்போது விளம்பரத்துக்காக தீவிரவாத அமைப்புகள் பொறுப்பேற்பது வழக்கம்தான் என்றாலும், அல் காய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கும் கூட தொடர்பு இருக்கலாம் என்பதை மறுக்க முடியாது. அதேபோல, தீவிரவாதத்தை வளர்க்கும் வெளிநாட்டு உளவு அமைப்புகளின் பங்கு இந்தத் தாக்குதல்களில் இருந்திருக்கிறதா என்பதை விசாரிக்க வேண்டியதும் அவசியமாகும்.
துரதிருஷ்டவசமாக இலங்கை அரசுக்கும் மக்களுக்கும் இது வேதனையான நேரம். ஆபத்தான காலங்களில் அமல் செய்யப்படும் அவசர நிலையால், அரசு நிர்வாகமே முடங்கிப் போய் விடும். நிலைமை கையை மீறிப் போகாமல் இருக்க சிறந்த தலைமையின் பலன்தரும் நடவடிக்கைகள் அவசியம். ராணுவ செயலாளரின் ராஜினாமா மற்றும் உயர் அதிகாரிகளின் பதவி நீக்கத்தோடு, மக்களின் கோபத்தை தணிக்க மேலும் பல நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். 2009-ம் ஆண்டுக்குப் பிறகு தேச ஒற்றுமையை வளர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் முழு பலனைத் தரவில்லை. இன்னமும் இலங்கை சமூகங்களிடையே இருக்கும் வெறுப்புணர்வு தொடர்வதையே இந்தக் குண்டுவெடிப்பு காட்டுகிறது. தற்போது அமல் செய்யப்பட்ட அவசரகால அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்தி நீதி நடவடிக்கைகளை புறந்தள்ளி யாரை வேண்டுமானாலும் கைது செய்யும் அராஜகத்தில் ஈடுபடாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
இலங்கையில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் இந்தியாவுக்கும் தெற்கு ஆசியாவுக்கும் முக்கியமான பாடமாகும். தீவிரவாதத்தால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி இந்தியாவுக்கு நன்றாகவே தெரியும் என்பதால்தான், முக்கியமான உளவுத் தகவல்களை தேவைப்படும்போது நட்பு நாடுகளுடன் பரிமாறிக் கொள்கிறது. ஆனால், அதே நேரம் இந்தியாவும் மிகவும் உஷாராக இருக்க வேண்டும். இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளைக் கொண்ட சில நாடுகள், இந்தியா
வின் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில், அண்டை நாடுகளில் இருக்கும் தீவிரவாத அமைப்புகளைத் தூண்டிவிட வாய்ப்புள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்திய கடற்படை விழிப்புடன் பணியாற்ற வேண்டும். தீவிரவாதத்தை வேரோடு அழிக்க, தெற்கு ஆசியாவில் உள்ள நட்பு நாடுகளுடன் இணைந்து நெருக்கமாக செயலாற்றவும் இதுவே உகந்த நேரம்.
டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி
எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் பேராசிரியர்.
வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர்
தமிழில்: எஸ்.ரவீந்திரன்