இலங்கையில் இன்று இரவு முதல் அவசரநிலை பிரகடனம்: அதிபர் சிறிசேனா அறிவிப்பு

இலங்கையில் இன்று இரவு முதல் அவசரநிலை பிரகடனம்: அதிபர் சிறிசேனா அறிவிப்பு
Updated on
2 min read

இலங்கையில் தேவாலாயங்கள், ஹோட்டல்களில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 290 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, தீவிரவாத செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று இரவு முதல் அவசரநிலையை பிரகடனம் செய்யப்பட உள்ளது.

தேசிய பாதுகாப்புக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இந்த உத்தரவை அதிபர் சிறிசேனா பிறப்பித்துள்ளார்.

அதேசமயம்,  இலங்கையில் இரவு 8 மணிமுதல் காலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் அது இன்று காலை விலக்கிக்கொள்ளப்பட்டது. அது மீண்டும் இன்று இரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவசரநிலையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

290 பேர் படுகொலை

கொழும்பு நகரில் உள்ள புனித அந்தோனி தேவாலயம், மட்டகளப்பில் உள்ள தேவாலாயம்,  நீர்கொழும்பு நகரில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலயம் ஆகியவற்றிலும் இரு சொகுசு ஹோட்டல்கள் என மொத்தம் 8 இடங்களில் நேற்று தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இதுவரை 290 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆனால், தற்கொலைப்படைத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று இலங்கை அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யாருக்கு தொடர்பு

இலங்கை அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அரசின் செய்தித்தொடர்பாளர் ரஜிதா சேனரத்னே கூறுகையில், " இந்த தாக்குதலில் மனிதவெடிகுண்டுகளாக வந்தவர்கள் அனைவரும் உள்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான். உளவுத்துறையின் தலைவர் இதுபோன்ற தாக்குதல் நடத்த வாய்ப்புகள் இருப்பதாக கடந்த 11-ம் தேதி போலீஸ் ஐஜிக்ககு எச்சரிக்கை விடுத்திருந்தார். இம்மாதம் 4-ம்தேதியும் உளவுத்துறை அமைப்பினர் போலீஸ் ஐஜிக்கு இதுபோன்ற தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், எதையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

இந்த தாக்குதலை இலங்கையில் உள்ள தேசிய தஹ்ஹீத் ஜமாத் எனும் இஸ்லாமியஅமைப்புதான் என்று சந்தேகிக்கிறோம். இந்த அமைப்புக்கு ஏராளமான வெளிநாட்டு அமைப்புகளுடன் தொடர்பு இருக்கிறது.

 உளவுத்துறையின் தகவல்களை மதிக்காமல் செயல்பட்ட போலீஸ் தலைவர் புஜிதா ஜெயசுந்தரா ராஜினாமா செய்ய வேண்டும் " எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள முக்கிய முஸ்லிம் கட்சியான இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் அமைச்சருமான ராஃப் ஹக்கிம் கூறுகையில், " உளவுத்துறையின் எச்சரிக்கை அறிக்கைகளை கிடைத்தபோதிலும்கூட எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் போலீஸார் எடுக்கவில்லை" எனத் தெரிவித்தார்.

ஊரடங்கு

இதற்கிடையே தற்கொலைப்படைத் தாக்குதலைத் தொடர்ந்து நாடுமுழுவதும் நேற்று இரவு முதல் இன்று காலை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. நாட்டில் தீவிரவாத செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று இரவு 8 மணியில் இருந்து காலை 4 மணிவரை இரவு நேர ஊரடங்கு உத்தரவை இலங்கை அரசு பிறப்பித்துள்ளது.

அவசரநிலை

மேலும், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தலைமையில் இன்று தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் நாட்டில் தீவிரவாத செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் நிபந்தனைகளுடன் கூடிய அவசரநிலையை இன்றுஇரவு முதல்  முதல் நாடுமுழுவதும் பிறப்பிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான உத்தரவை அதிபர் சிறீசேனா பிறப்பித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in