Last Updated : 28 Apr, 2019 12:59 PM

 

Published : 28 Apr 2019 12:59 PM
Last Updated : 28 Apr 2019 12:59 PM

இலங்கை மனிதவெடிகுண்டு தாக்குதல்: தமிழ் ஆசிரியர், உள்பட 106 பேர் கைது: ஐஎஸ் தீவிரவாத அமைப்பு திடீர் அறிக்கை

இலங்கையில் கடந்தவாரம் ஈஸ்டர் பண்டிகையின்போது, தேவாலயங்கள்,ஹோட்டல்களில் நடத்தப்பட்ட மனிதவெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக தமிழ்வழி கற்பிக்கும் ஆசிரியர், பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்பட 106 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், நேற்று 3 தீவிரவாதிகள் உள்பட 15 பேர் தற்கொலைப்படைத் தாக்குதலில் உயிரிழந்த நிலையில், அதில் 3 பேர் ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த வாரம் ஈஸ்டர் பண்டிகையின் போது நீர்கொழும்பு, மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய நகரங்களில் உள்ள தேவாலயங்கள், ஹோட்டல்களில் தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டனர், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்காமல் இருந்த நிலையில், ஐஎஸ் தீவிரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சிலர் இந்த செயலைச் செய்துள்ளனர் என்று ஐஎஸ் அமைப்பு தெரிவித்தது.

இந்த தாக்குதலுக்கு மூளையாக இலங்கையில் உள்ள தேசிய தவ்ஹித் ஜமாத்  மற்றும் ஜமாதி மிலாது இப்ராஹிம் ஆகிய இரு இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இலங்கை அரசுக்கு கிடைத்தன.

குறிப்பாக தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரன் ஹசிம் இதற்கு மூளையாக இருந்தார் என்பது தெரியவந்தது. ஆனால், இந்த தாக்குதலில் முதலில் ஹசிம் கொல்லப்படவில்லை என்று கூறப்பட்ட நிலையில், மனித வெடிகுண்டாக மாறி இறந்துவிட்டார் என்று அதிபர் சிறிசேனா அறிவித்தார்.

இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக இலங்கை அரசு நாட்டில் அவசர நிலையை கொண்டு வந்து சந்தேகத்திடமானவர்களை கைது செய்து வருகிறது. இந்த தாக்குதல் தொடர்பாகவும், தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்போடு தொடர்பில் இருந்தவர்களை இலங்கை கிரிமினல் புலனாய்வு துறை(சிஐடி) தேடி வந்தனர்.

கடந்த ஒருவராத்தில் தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்பில் இருந்த 106 பேரைக் கைது செய்துள்ளனர் என்று கொழும்பு பேஜ் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள 106 பேரில் 40 வயது மதிக்கத்தக்க தமிழ்வழிக் கற்றுக்கொடுக்கும் பள்ளி ஆசிரியர் என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் மட்டும 50 சிம் கார்டுகள், சட்டவிரோத பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

கல்பிட்டியா போலீஸார், கடற்படையினர், ராணுவம், போலீஸார் ஆகியோர் இணைந்து நேற்று சிறப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக பிரதான சாலைகளில் வாகனங்களை மறித்து போலீஸார், ராணுவம் சோதனை நடத்தினார்கள்.

இதில் காலே நகரில் உள்ள டாம்கேதாரா பகுதியில் சந்தேகத்திடமான முறையில் வாகனத்தில் வந்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பு ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வந்துள்ளது. அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், ஒரு மருத்துவர், பள்ளியின் ஆலோசகர் ஆகியோரையும்  போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஐஎஸ் அமைப்பு அறிக்கை

இதற்கிடையே, கொழும்பு நகரில் இருந்து 360 கி.மீ தொலைவில் உள்ள கல்முனை எனும் நகரில் ஒரு வீட்டில் ஐஎஸ் ஆதரவு தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று சோதனையிட முயன்றபோது போலீஸாருக்கும், தீவிரவாதிகளுக்கும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் 3 ஐஸ் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், அந்த வீட்டில் இருந்தவர்களில் 6 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட 15 பேர் வெடிகுண்டுகளை வெடிக்கவைத்து உயிரழந்தனர்.

இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்த 15 பேரில் 3 பேர்  ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தன்னுடைய அமாக் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x