

அமெரிக்காவில் ஒரே விமானத்தைஇயக்கிய அம்மா- மகள் பைலட் குழுவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் இயங்கிவரும் விமான நிறுவனம் டெல்டா ஏர்லைன்ஸ். இதில் மருத்துவர் ஜான் வாட்ரெட் என்பவர் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து அட்லாண்டாவுக்குப் பயணித்தார்.
அப்போது பைலட் குழுவில் இருந்த பெண்கள் இருவரும் அம்மா- மகள் என்பதைத் தெரிந்துகொண்டார். தாய் வென்டி ரெக்ஸன் கேப்டனாகவும் மகள் கெல்லி ரெக்ஸன் ஃபர்ஸ்ட் ஆபிஸராகவும் பணியாற்றினர்.
பெண்கள் இருவரையும் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பகிர்ந்தார் ஜான். அந்தப் படம் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் பைலட்டாகப் பணியாற்றிய தாயின் உத்வேகத்தைப் பல்வேறு தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் பெற்றோருடன் வேலை பார்ப்பது போர் என்ற ரீதியில் மகள் கெல்லியை சிலர் கிண்டல் செய்துவருகின்றனர்.