கொழும்பு தற்கொலைப் படை தாக்குதல்: முக்கிய தகவல்களை இந்தியா, இலங்கையிடம் பகிர்ந்த மொராக்கோ

கொழும்பு தற்கொலைப் படை தாக்குதல்: முக்கிய தகவல்களை இந்தியா, இலங்கையிடம் பகிர்ந்த மொராக்கோ
Updated on
1 min read

இலங்கையில் 9 இடங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடந்த தற்கொலைப் படை தாக்குதல் தொடர்பான முக்கியத் தகவல்களை இலங்கை மற்றும் இந்திய அரசிடம் மொராக்கோ அரசு பகிர்ந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தீவிரவாதத்தைத் தடுக்கும் நடவடிக்கையில் மொராக்கா நாடு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் இலங்கை தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்த விவரங்களை மொராக்கோ அரசு பகிர்ந்துள்ளது.

ஈஸ்டர் பண்டிகையின்போது, இலங்கையில் தேவாலயம், ஹோட்டல்கள் உள்ளிட்ட 9 இடங்களில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் இதுவரை 359 பேர் கொல்லப்பட்டனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. நியூஸிலாந்து நாட்டில் கடந்த ஒரு மாதத்துக்கு முன் மசூதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இலங்கையில் உள்ள முஸ்லிம் அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்துக்கு இந்தத் தாக்குதலோடு தொடர்பு இருக்கிறது என்று இலங்கை அரசு சந்தேகிக்கிறது. ஆனால், உறுதியான தகவல்களும், எதற்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்த தகவல்கள் இல்லை.

இலங்கையில் தீவிரவாதச் செயல்களைக் கட்டுப்படுத்தும் வகையில், ராணுவத்துக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு, அவசர நிலையை அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார். இந்தத் தாக்குதலில இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகமும் இலக்காக வைக்கப்பட்டது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இந்தத் தற்கொலைப்படைத் தாக்குதலை நடத்தியவர்களுக்கு வெளிநாட்டு அமைப்புகளுடன் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா, வெளிநாடு உதவி ஏதும் இருக்கிறதா என்பது குறித்து இலங்கை அரசு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த சூழலில் வடக்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோ இஸ்லாத்தில் மிதமான  போக்கை கடைபிடிக்கக் கூடிய நாடு. தீவிரவாதத்துக்கு எதிராகவும், இஸ்லாமிய நாடு அமைக்கப் போராடும் ஐஎஸ் அமைப்புக்கு எதிராகவும் தீவிரமாக மொராக்க அரசு செயல்பட்டு வருகிறது.

மொராக்கோ அரசு,  இலங்கை தாக்குதலில் ஈடுபட்ட ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் குறித்த முக்கியத் தகவல்களை இந்திய, இலங்கை அரசிடம் பகிர்ந்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்த விதமான தகவல்கள் குறித்த விவரமும் தெரியவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in