

இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் நடுநிலையான தீர்வு காணப்படும் என்று சீனா தெரிவித்துள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் அடுத்த வாரம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில், சீன வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ஹுவா சன்யிங் கூறியுள்ளதாவது: எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்பதில் இரு நாடுகளும் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளன. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் எல்லைப் பிரச்சினைக்கு நடுநிலையான, சரியான தீர்வு எட்டப்படும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.
எல்லைப் பகுதியில் சாலை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த இந்தியா நடவடிக்கை எடுத்து வருவது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, அதற்கு பதிலளிக்க ஹுவா சன்யிங் மறுத்துவிட்டார். சீன அதிபர் ஜி ஜின்பிங் வரும் 17-ம் தேதி இந்தியாவுக்கு வருகிறார். தனது 3 நாள் சுற்றுப்பயணத்தின்போது எல்லைப் பிரச்சினை, தொழிற்துறை முதலீடு உள்ளிட்டவை குறித்து அவர் பேச்சு நடத்தவுள்ளார்.
கடந்த 9-ம் தேதி சீனா சென்ற இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார். இந்தியாவில் அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்கவுள்ள முக்கிய நிகழ்ச்சிகள் தொடர்பாக சீன உயர் அதிகாரிகளிடம் அஜித் தோவல் ஆலோசனை நடத்தினார். அதிபர் ஜி ஜின்பிங்கின் வருகையை இந்தியா ஆவலுடன் எதிர்பார்ப்பதாக கூறினார்.