Published : 16 Apr 2019 12:00 AM
Last Updated : 16 Apr 2019 12:00 AM

ருவாண்டாவில் நடந்த இனப் படுகொலை

ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் மனித வரலாற்றில் ஒப்பீடு செய்ய முடியாத மிகக் கொடுமையான சம்பவம் நடந்து இந்த மாதத்தோடு 25 ஆண்டுகள் ஆகிறது. 1994-ம் ஆண்டில் ருவாண்டா மக்கள் தொகையில் ஏறக்குறைய 10 சதவீதம் பேர், அதாவது 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். ஹுட்டு இனத்தை சேர்ந்த ருவாண்டா அதிபர் விமான விபத்தில் இறந்ததற்கு டுட்சி இனத்தவர்தான் காரணம் என்பதால் டுட்சி இனத்தவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில்தான் இத்தனை பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து 3 மாதங்களாக நடந்த மனித வேட்டையை உலகமே அதிர்ச்சியோடு பார்த்தது. ஐ.நா. சபை இந்தப் படுகொலையைத் தடுக்க எதுவும் செய்ய முடியாமல் வேடிக்கை மட்டுமே பார்த்தது. அப்போது நடந்த சம்பவங்களை ருவாண்டா மக்கள் இப்போது நினைத்துப் பார்த்து, தங்கள் வாழ்க்கையில் இழந்ததை மறந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார்கள்.

வரலாற்றில் மனித குலமே வெட்கப்படக் கூடிய படுகொலைச் சம்பவங்கள் பல நாடுகளில் நடந்திருக்கின்றன. அப்படிப்பட்ட நாடுகளில் ருவாண்டாவும் ஒன்று. மிகக் கொடூரமான வன்முறைச் சம்பவங்கள் நடந்தபோது, அதைத் தடுக்க உலக நாடுகள் அனைத்துமே எதுவுமே செய்யவில்லை. கம்போடியாவில் பைத்தியக்காரத்தனமான கொள்கைகளின் அடிப்படையில் 20 லட்சம் கம்போடிய மக்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான போல் பாட், ஜெங்க் சாரி, டா மாக் ஆகியோர் நடத்திய படுகொலைகள் எத்தனை பேருக்கு நினைவிருக்கும். கம்போடியாவின் கொலைக் களங்கள், கடந்த 1975 முதல் 1979 வரை நடத்தப்பட்ட கொடூரமான படுகொலைகளின் சாட்சியாக இருக்கின்றன. கொலைக்கு காரணமான போல் பாட், 1997-ல் கைது செய்யப்பட்டார். அடுத்த ஆண்டே வீட்டுக் காவலில் இருந்தபோது இறந்து போனதால், செய்த தவறுக்கு நீதி கிடைக்காமலே போய்விட்டது. நாம் பென் நகரில் உள்ள டுவால் ஸ்லெங் அருங்காட்சியகத்தில் போல் பாட் பயன்படுத்திய சித்திரவதைக் கூடங்களின் புகைப்படங்களைப் பார்க்கும்போது உடல் சில்லிட்டு போய்விடும். கம்போடிய மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர், அதாவது 30 லட்சம் பேருக்கு மேல் கலவரம் நடந்த 4 ஆண்டுகளில் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

`கடந்த 1994-ல் எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. இப்போது பிரகாசமாக இருக்கிறது. எப்படி நடந்தது இது.. ருவாண்டா மீண்டும் ஒரே குடும்பமாகிவிட்டது..’ என படுகொலைகள் நடந்த 25-வது ஆண்டு நினைவு தினத்தில் அந்நாட்டின் அதிபர் பால் காகமே கூறியிருக்கிறார். ருவாண்டாவில் டுட்சி இனத்தவர் மீது, ஹுட்டு தீவிரவாதிகள் நடத்திய படுகொலைகளை முடிவுக்குக் கொண்டு வந்த போராளி படைகளின் கமாண்டராக இருந்தவர்தான் காகமே. `எங்கள் மக்களின் கரங்கள் இணைந்து நாட்டின் தூண்களாக உருவெடுத்திருக்கின்றன. எங்களின் உடல்களும் மனங்களும் காயங்களாலும் தழும்புகளாலும் நிறைந்திருக்கின்றன. ஆனால் யாரும் தனியாக இல்லை. போராடும் குணம் கொஞ்சமும் குறையவில்லை. இங்கு என்ன நடந்ததோ, அது இனி ஒருபோதும் நடக்காது..’ என்கிறார் அவர். அதிபர் காகமே மீதும் அரசியல்ரீதியாக பல விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன என்றாலும் நாட்டை ஆழமான அதிர்ச்சியில் இருந்து மீட்டு, வலுவான பொருளாதார கொள்கைகளை அமல்படுத்தி மீட்டதால் நற்பெயர் இருக்கிறது. அவரின் பொருளாதார கொள்கைகளுக்கு நல்ல பலனும் கிடைக்கத் தொடங்கியுள்ளது. 2017-ல் மூன்றாம் முறையாக அவர் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த ஆண்டில் ருவாண்டா 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளதாக ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கி கூறியிருக்கிறது.

இனப்படுகொலை பல விதமானது. ருவாண்டாவில் இரண்டு பழங்குடி இனத்தவரிடையே உருவாகி, துப்பாக்கியால் சுட்டுக் கொண்டும் கோடாரிகளால் வெட்டிக் கொண்டும் லட்சக்கணக்கானோரை பலி கொண்டது. கம்போடியாவில், தன் கொள்கைகளை எதிர்த்த அத்தனை பேரையும் பழி வாங்கினார் போல் பாட். கண்ணாடி அணிந்தவர்கள் எல்லாம் தனது அதிகாரத்தைத் தட்டிக் கேட்கும் அறிவுஜீவிகளாக இருக்கலாம் என நினைத்து அவர்கள் அனைவரையும் கொன்ற கொடுமையும் அப்போது அரங்கேறியது. போல் பாட் கும்பலின் அதிகார வெறி காரணமாக அரசுப் படைகளுக்கும் அப்போதைய அரச குடும்பத்து இளவரசர் நரோடம் சிஹானுக் படைகளுக்கும் இடையில் 20 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்தது. போல் பாட் இறந்து 20 ஆண்டுகள் ஆன பிறகும், அவரின் கொடூரமான கொள்களைகளால் பொருளாதார ரீதியாக இன்னமும் பின் தங்கியே இருக்கிறது கம்போடியா.

உலகின் எந்த மூலையிலும் இனியும் இதுபோன்ற படுகொலைகள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு, சர்வதேச சமுதாயத்துக்கு இருக்கிறது. கலவரம் நடக்கும் நாடுகளின் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்வதை விடவும், இனப்படுகொலையை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதுதான் மிகவும் அவசியம். இதில் சோகமான விஷயம் என்னவென்றால், தீவிரவாதிகள் மட்டுமல்லாமல், உலகத் தலைவர்களும் தங்களின் அரசியல் ஆதாயத்துக்காக வெறுப்பு உமிழும் கருத்துகளை பேசி வருவதுதான். இனப்படுகொலைகளுக்கு ஒரு சாராரின் தீவிரக் கொள்கைகள் மட்டுமே காரணமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு பிரிவினர் மீதான வெறுப்பும் அந்த வெறுப்புடன் கூடிய குற்றங்களும் கூட திட்டமிட்ட படுகொலைகள் நடக்க முக்கிய காரணமாக இருக்கின்றன.

டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி

எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் பேராசிரியர்.

வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர்

தமிழில்: எஸ்.ரவீந்திரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x