Published : 12 Apr 2019 12:00 AM
Last Updated : 12 Apr 2019 12:00 AM

தேர்தலில் சரிவை சந்தித்த துருக்கி அதிபர்

துருக்கியின் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக எதிர்க்கட்சிகள் இணைந்து ஆளும் கூட்டணிக்கு தேர்தலில் பலத்த அடி கொடுத்துள்ளன. துருக்கி அரசியலில் கடந்த 15 ஆண்டுகளாக கோலோச்சி வரும் ஆளும் கூட்டணியின் தலைவர் அதிபர் எர்டோகன் மிகப் பெரிய சரிவை சந்தித்திருக்கிறார்.

உள்ளாட்சித் தேர்தலில் இஸ்தான்புல், அங்காராவில் மட்டுமல்லாமல், தெற்கு கடற்கரை நகரங்களிலும் மத்திய பகுதிகளிலும் எதிர்க் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 1995-ல் இஸ்தான்புல் மேயராக எர்டோகன் வெற்றி பெற்ற பிறகுதான் பிரபலம் ஆனார். அதனால் அங்கும் அவரது கட்சி தோல்வி அடைந்திருப்பதில் அவருக்கு கொஞ்சம் வருத்தம்தான். இந்தத் தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடந்த 2 மாதங்களாக எர்டோகன் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வந்தார். ஆனாலும் எதிர்க் கட்சிகளை தீவிரவாதிகள் போல் சித்தரித்து மக்களை பயமுறுத்தி ஓட்டு வாங்கி விடலாம் என்ற அவரது கணக்கு தவறி விட்டது.

தேர்தல் தோல்வி மூலம் எர்டோகன் செல்வாக்கு இழந்து விட்டதாகக் கூறி விட முடியாது. இந்தத் தோல்வி அதிபருக்கும் அவரது ஆளும் கூட்டணிக்கும் ஒரு பாடம். இஸ்தான்புல் உள்ளிட்ட நகரங்களில் அடைந்த தோல்வியை எதிர்த்து ஆளும் கூட்டணி அப்பீல் செய்திருக்கிறது. முடிவு எப்படி இருக்குமோ என்ற அச்சம் எதிர்க் கட்சிகளுக்கு இருக்கிறது. தேர்தல் முடிவுகள் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் புதிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், துருக்கியின் உள்நாட்டு விவகாரத்தில் வெளிநாடுகள் குறிப்பாக அமெரிக்கா தலையிடுவதாக ஆளும் கட்சியின் செய்தித் தொடர்பாளர் புகார் கூறியிருக்கிறார். “எந்த ஒரு ஜனநாயக நாட்டுக்கும் சுதந்திரமான, நேர்மையான தேர்தல் அவசியம். அதேபோல், தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்வதும் அவசியம்” என அமெரிக்க வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ராபர்ட் பல்லடினோ கூறியிருக்கிறார். உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தொடர்பான விஷயங்களை துருக்கியின் தேர்தல் கவுன்சில்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, வெளிநாட்டு அரசாங்கங்கள் அல்ல என துருக்கி அரசு தெரிவித்துள்ளது.

அதிபர் எர்டோகன் தோல்விக்கு இரண்டு முக்கிய விஷயங்கள்தான் காரணம் என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முதல் முக்கிய காரணம், கடந்த 10 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவுக்கு இருக்கும் நாட்டின் மோசமான பொருளாதாரமும் தேக்கநிலையும் ஆகும். எங்கு பார்த்தாலும் வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுகிறது. பணவீக்கம் காரணமாக நாட்டின் கரன்சியான லிராவின் மதிப்பு பெரிதும் வீழ்ச்சியடைந்து விட்டது. தேர்தல் முடிவுகள் எப்படி இருக்குமோ என்ற அச்சம் காரணமாகவே உள்நாட்டு மக்களும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் நம்பிக்கை இழந்துவிட்டதால், லிராவின் மதிப்பு விழுந்து விட்டது. தேக்கநிலை காரணமாக வேலையில்லாத் திண்டாட்டம் 15 சதவீதமாக அதிகரித்து விட்டதாகவும் 24 சதவீத இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பதாகவும் அரசே ஒப்புக் கொண்டுள்ளது. மோசமான பொருளாதார நிலை காரணமாக, அதிபர் எர்டோகன் அரசியல் ரீதியாக மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியதாகி விட்டது.

இரண்டாவது மிக முக்கிய காரணம், ஒன்றுக்கும் உதவாதவை எனக் கருதப்பட்ட எதிர்க் கட்சிகள் ஒன்றாக இணைந்தது ஆகும். எதிர்க் கட்சிகள் அனைத்தும் தங்கள் வேறுபாடுகளை மறந்து, இணைந்து தேர்தலை எதிர்கொண்டதால் வெற்றிக் கனியைப் பறித்துள்ளன. இதை ஆளும் கூட்டணி கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

எதிர்க் கட்சிகள் வெற்றி பெற்றுள்ள பகுதிகள் இணைந்து நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 65 சதவீதத்தைக் கொண்டுள்ளன. ஆளும் கூட்டணி 51 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தாலும் துருக்கியின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் பகுதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வந்திருப்பதால் எதிர்க் கட்சிகள் புதிய உத்வேகம் அடைந்துள்ளன.

உள்ளாட்சித் தேர்தலுக்காக இணைந்த எதிர்க் கட்சிகள், அடுத்து வரும் தேசிய தேர்தலுக்கும் இதேபோல் இணைந்து பணியாற்றுவார்களா என்பதுதான் இப்போதைய கேள்வி. கடந்த 20 ஆண்டுகளாக அதிபர் எர்டோகனும் அவரது ஆளும் கட்சியும் துருக்கி அரசியலில் கோலோச்சி வந்த நிலையில், கடந்த வார தேர்தல் தோல்வி, பல கேள்விகளை எழுப்பியுள்ளது. “கட்சிகள், அரசாங்கங்கள், வாழ்க்கை என எல்லாமே ஒருநாள் முடிவுக்கு வரும். எர்டோகன் கடந்த 17 ஆண்டுகளாக அதிபராக இருந்து வருகிறார். எதிர்க் கட்சிகள் இடையே சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் அரசியல் ரீதியாக வெற்றி கிடைத்துள்ளது. அதிபருக்கும் விரைவில் முடிவு வரும்” என இஸ்தான்புல் நகரின் புதிய மேயராக பதவியேற்க உள்ள எதிர்க் கட்சித் தலைவரான எக்ரேம் இமாமோக்லு கூறியிருக்கிறார்.

டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி

எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் பேராசிரியர். வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர்

தமிழில்: எஸ்.ரவீந்திரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x