Published : 13 Sep 2014 10:33 AM
Last Updated : 13 Sep 2014 10:33 AM

உலக மசாலா

அமெரிக்காவில் வசிக்கும் கிரிஸ்டியம் ராமோஸ் மிகச் சிறந்த ஓவியர்! ஆனால் அவர் ஓவியம் வரையப் பயன்படுத்துவது பற்பசை! நடிகர்கள், தலைவர்கள் போன்ற பிரபலமானவர்களை எல்லாம் பற்பசையால் ஓவியங்களாக தீட்டி அசர வைத்திருக்கிறார். ஒவ்வோர் ஓவியத்துக்கும் 200 மணி நேரமும் 30 பற்பசை டியூப்களும் தேவைப்படுகின்றன. பொருத்தமான பற்பசைகளை எடுத்து, கைகளாலேயே ஓவியங்களைத் தீட்டுகிறார்.

மிக நுணுக்கமான விஷயங்களுக்கு மட்டுமே பிரஷ் உபயோகப்படுத்துகிறார். “ஒரு நாளைக்கு 10 மணி நேரம் பற்பசையுடன் இருப்பது கடினமான விஷயம்தான். ஆனாலும் இப்படி ஓவியம் தீட்டவே எனக்கு விருப்பமாக இருக்கிறது” என்கிறார் ராமோஸ். பற்பசையின் நாற்றத்துக்காகவே, அமெரிக்காவில் உள்ள ஓவியக்கூடங்களில் 10 மணி நேரத்துக்கு மேல் இவருடைய ஓவியங்களுக்கு அனுமதி தருவதில்லை.

உங்க ஓவியங்களை மூக்கு மேல விரலை வச்சுத்தான் ரசிக்கணுமா ராமோஸ்?

செல்லப் பிராணிகள் வேலை செய்து பார்த்திருப்போம். ரஷ்யாவில் ஓர் அணில் பற்களில் ஒரு சின்ன டப்பாவைச் சுமந்து கொண்டு ஓடியதை 3 பள்ளி மாணவர்கள் பார்த்து அதிசயித்தனர். அவர்களுடன் முன்னாள் போலீஸ் அதிகாரியும் சேர்ந்து அணிலைப் பின்தொடர்ந்து சென்றார்கள். அணில் வேகமாக ஓடி மறைந்துவிட்டது. சிறிது நேரம் கழித்து மீண்டும் ஒரு டப்பாவைக் கவ்விக்கொண்டு அந்த அணில் ஓடி வந்தது.

மீண்டும் துரத்திச் சென்றார்கள். ஆனால் அணிலைப் பிடிக்க முடியவில்லை. போதைப் பொருள் கடத்துகிறவர்கள் இப்படி அணிலை பழக்கப்படுத்தி வேலை செய்ய வைப்பதாக, பிறகு தெரியவந்திருக்கிறது.

அணிலுக்கு மட்டும் உண்மை தெரிந்தால் உங்களைச் சும்மா விடாது….

நியூயார்க்கில் மரிலின் மான்ஸ்ஃபீல்ட் என்பவர் 300 பொம்மைகளுடன் வசிக்கிறார். சின்ன வயதில் இருந்தே பொம்மைகள் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்த மரிலின், ஒருகட்டத்தில் தானே பொம்மைகள் செய்ய ஆரம்பித்து விட்டார். குழந்தைக்குச் செய்வதைப் போலவே ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து வடிவமைப்பார். அவரது அக்கறையும் உழைப்பும் மிக மிக அழகான பொம்மைகளாக உருவாகும். ஆட்டின் முடியைப் பயன்படுத்தினால் இயற்கையாக இருக்காது என்பதால், தன் மகனின் முடிகளையே பொம்மைக்குப் பயன்படுத்தி வருகிறார்.

வீட்டில் பெரும்பான்மையான இடத்தை பொம்மைகள் எடுத்துக்கொண்டாலும் அவரது கணவரும் குழந்தைகளும் மரிலினுக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள். ஸ்ட்ரோலரில் பொம்மைகளை வைத்துக்கொண்டு, நடை பயிற்சி செய்வது என்றால் மரிலினுக்குக் கொள்ளை விருப்பம். பலர் பாராட்டுவார்கள்; சிலர் கிண்டல் செய்வார்கள். அவர்களுக்கு அது பொம்மை; மரிலினுக்கு அது குழந்தை.

அம்மா… அம்மம்மா…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x