Published : 11 Sep 2014 11:32 AM
Last Updated : 11 Sep 2014 11:32 AM

ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படைக்கு எதிராக வான்வழித் தாக்குதல்: ஒபாமா உத்தரவு

ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படைக்கு எதிராக, சிரியாவில் வான்வழித் தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

இராக் மற்றும் சிரியாவின் பகுதிகளை இணைத்து தனி இஸ்லாமிய நாடு அமைக்கும் நோக்கத்தோடு போர் நடத்திவரும் ஐ.எஸ்.ஐ.எஸ்-ஸுக்கு எதிராக நேட்டோ நாடுகளுடன் இணைந்து நடவடிக்கைகள் எடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளை அமெரிக்க அரசு மேற்கொண்டது.

இந்த நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற செனட்களின் ஆதரவு இல்லாமல், ஐ.எஸ்.ஐ.எஸ்-ஸுக்கு எதிராக சிரியாவில் தாக்குதல் நடத்த அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு ஐ.எஸ்-ஸுக்கு எதிரான தாக்குதலில் அதிபர் ஒபாமா பிறப்பித்த முதல் உத்தரவாகும்.

அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதல் நினைவு தினத்தில், அந்நாட்டு மக்களுக்காக வெள்ளை மாளிகையிலிருந்து ஒபாமா நிகழ்த்திய உரையில் இது குறித்த சில அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

அதில், "நமது நாட்டுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கிளர்ச்சியாளர்கள், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களை நாம் வீழ்த்துவோம்.

அமெரிக்க மக்களுக்கு பாதுகாப்பான சூழல் நிலவச் செய்வதே நமது அரசின் முதன்மையான முக்கிய கடமை. அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருக்க நினைத்தால், அவர்கள் யாராக இருந்தாலும் வீழ்த்தப்படுவார்கள்.

ஆனால், தற்போதையச் சூழல் என்பது முன்பு ஆப்கானிலும் இராக்கிலும் நடத்திய தாக்குதலிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை என்பதை அமெரிக்க மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இவர்களால் (ஐ.எஸ்.) தற்போது நமது நாட்டுக்கும் பிரட்டனுக்கும் அச்சுறுத்தல் உள்ளது. இந்த நிலையில் நாம் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகும்.

ஐ.எஸ் கிளர்ச்சி அமைப்பின் ஆயுத குழுவுக்கு நிதி உதவி கிடைப்பதை நாம் முதலில் தடுக்க வேண்டும். இவர்களை இந்த நிலையிலேயே தடுக்காவிட்டால், உலகம் முழுவதிலும் ஊடுருவி தாக்குதல் நடத்துவார்கள். இதற்கான நடவடிக்கை சிரியாவில் தொடங்கப்பட உள்ளது.

பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகள் பல ஆண்டு காலமாக தொடர்ந்து வருகின்றன. ஐ.எஸ்.ஐ.எஸ்-ஸுக்கு எதிராக இராக் ராணுவத்தினரையும் குர்திஸ் படையினருக்கும் பயிற்சி அளிக்க சில ஆண்டுகள் தேவைப்படும். ஆனால், அவர்களை (ஐ.எஸ்) உடனடியாக வீழ்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது" என்றார் ஒபாமா.

இது குறித்து பின்னர் பேசிய வெள்ளை மாளிகை அதிகாரிகள், ஐ.எஸ்.ஐ.எஸ்-ஸுக்கு எதிரான வான்வழித் தாக்குதலை இராக் எல்லையில் உள்ள சிரியா பகுதியில் இருந்து தொடங்குவதற்கு அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், இந்த உத்தரவு ஏற்கெனவே அறிவித்தது போன்று செனட்களின் ஆதரவு இன்றி பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஐ.எஸ்-ஸுக்கு எதிராக வான்வழித் தாக்குதல் நடத்த, வளைகுடா நாடுகளின் ஆதரவை அமெரிக்கா கோரியது. இதன் தொடர்ச்சியாக நேற்று (புதன்கிழமை) அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி, இராக் தலைநகர் பாக்தாத் சென்றார் என்பது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x